/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgsge.jpg)
தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். இந்தநிலையில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் வணிக ரீதியிலான திட்டங்கள், பங்குச்சந்தையின் ஏற்ற - இறக்கம் குறித்த கணிப்புகள் ஆகியவற்றை சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம், தான் பல்வேறு ஆலோசனைகளைப் பெற்றதாக சித்ரா ராமகிருஷ்ணா விசாரணையில் தெரிவித்ததாக கூறியுள்ள செபி, தாங்கள் திரட்டிய ஆவணப்படி இமயமலை சாமியாரே தேசிய பங்கு சந்தையை நிர்வகித்து வந்ததும் , சித்ரா ராமகிருஷ்ணா சாமியாரின் கைப்பாவையாக இருந்ததும் தெளிவாக தெரிகிறது எனவும் தெரிவித்தது. மேலும் சித்ரா ராமகிருஷ்ணாவின் இந்த செயல் கற்பனைக்கு எட்டாததது எனவும், பங்குச்சந்தையின் அடிப்படை கட்டுமானத்தையே உலுக்கும் செயல் எனவும் செபி கூறியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் தேசிய பங்கு சந்தையின் முன்னாள் குழு இயக்க அதிகாரியான ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் ஆனந்த் சுப்பிரமணியன் தேசிய பங்கு சந்தையின் தலைமை மூலோபாய ஆலோசகராக நியமிக்கப்பட்டு பின்னர், குழு இயக்க அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு அவர் தேசிய பங்கு சந்தையின் பொறுப்பிலிருந்து விலகினார்.
இமயமலை சாமியாரின் அறிவுரைப்படியே ஆனந்த் சுப்பிரமணியனை தேசிய பங்கு சந்தையின் தலைமை மூலோபாய ஆலோசகராக சித்ரா ராமகிருஷ்ணா நியமித்ததாகவும், அவருக்கு ஊதிய உயர்வு அளித்தாகவும் செபி கூறியிருந்த நிலையில், ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்படுவதற்கு முன்னர் கடந்த சில நாட்களாக ஆனந்த் சுப்பிரமணியனிடம் சிபிஐ விசாரணை நடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்னர் இந்த விவகாரம் தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியிருந்ததும் கவனிக்கத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)