/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rkr 3333.jpg)
மொத்தம் 33 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது புதுச்சேரி சட்டப்பேரவை. இதில் 30 உறுப்பினர்கள் மக்களால் சேர்ந்தெடுக்கப்படுவர். மற்ற மூன்று உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள் ஆவர். இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர் தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான வெங்கடேசன்,தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு, ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது. அதேசமயம் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதையடுத்து, காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவின்படி, சட்டப்பேரவையில் இன்று (22/02/2021) பெரும்பான்மையை நிரூபிக்க சிறப்புக் கூட்டம் நடத்தப்படுவதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.
அதன்படி. இன்று காலை 10.00 மணியளவில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் சுயேச்சை, நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.இந்த நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்களா? இதுகுறித்து சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nama444.jpg)
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் சட்டப்பேரவை அரசு கொறடாவுமான ஆர்.கே.ஆர். அனந்தராமன் கூறும்போது, "நியமன எம்.எல்.ஏ.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. குறிப்பாக என்னை எதிர்த்து போட்டியிட்டு 147 வாக்குகளே வாங்கி தோல்வியடைந்த தங்க.விக்ரமன் நியமன எம்.எல்.ஏவாக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் வாக்களிக்களிப்பதும்,மக்களால் நிராகரிக்கப்பட்டவரும் வாக்களிப்பதும் மக்களாட்சிக்கு எதிரானது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. எனவே, இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகரிடம் வலியுறுத்துவோம். நாங்கள் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறோம். எதிரணியில் குறைவாக இருக்கிறார்கள். நாங்கள் வெற்றிபெறுவோம்" என்றார்.
அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறும்போது, "நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கலாம் என உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும். காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழக்கும். எனவே நாராயணசாமி பெரும்பான்மை இழப்பதற்கு முன்னதாகவே தமது பதவியை ராஜினாமா செய்வது நல்லது" என்றார்.
பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் அரசு தப்பிக்குமா?கவிழுமா? என புதுச்சேரி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)