ADVERTISEMENT

திரிணாமூல் கட்சியோடு கூட்டணி வைக்க ராகுல் காந்தி ஆலோசனையா? - காங்கிரஸ் பொதுச்செயலாளர் விளக்கம்!

04:06 PM Jan 11, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் சில தினங்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளரான மஹுவா மொய்த்ரா, "கோவாவில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமூல் காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் செய்யும். மம்தா கடந்த காலத்தில் இதை செய்துள்ளார். மேலும் கோவாவில் கூடுதலாக ஒரு மைல் நடக்க தயங்க மாட்டார்" என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு காங்கிரஸ்,கோவா பார்வேர்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகிய கட்சிகளை டேக் செய்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ள கோவா பார்வேர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய், "கரோனா கட்டுப்பாடுகள் என்ற போர்வையில், ஜில்லா பரிஷத் தேர்தல்களில் செய்ததைப் போல, எதிர்க்கட்சிகளின் வெற்றியை தடுக்க பாஜக அனைத்து விஷயங்களையும் முயற்சிக்கும். காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை சேர்ந்த கோவா அணி ஒன்றிணைந்து, வரலாறு மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதற்கிடையே கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ப. சிதம்பரம், "திரிணாமூல் காங்கிரஸின் அறிக்கையை செய்தித்தாள்களில் படித்தேன், ஆனால் என்னிடம் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. (கட்சி தலைமையின்) அதிகாரப்பூர்வ வார்த்தைக்காக நாம் காத்திருக்க வேண்டும். கோவாவில் பாஜகவை காங்கிரசால் தனியாக தோற்கடிக்க முடியும். காங்கிரஸுக்கு யாராவது ஆதரவு அளிக்க விரும்பினால் தாராளமாக அளிக்கலாம்" எனத் தெரிவித்தார். இதனால் கோவா தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாகலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தநிலையில் ராகுல் காந்தி, கோவா மாநில தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் கோவா மாநில பொறுப்பாளர் ப.சிதம்பரம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் திரிணாமூல் காங்கிரஸோடு கூட்டணி வைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், திரிணாமூல் காங்கிரஸோடு கூட்டணி அமைப்பது தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசித்ததாக வெளியான தகவல் வதந்தி எனவும், விரைவில் தாங்கள் கோவாவை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்வோம் என நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT