ADVERTISEMENT

மோடி அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ்!

10:21 AM Jul 26, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து நான்காம் நாளான நேற்று வரை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவுவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து நேற்று நாடாளுமன்றத்தின் மேலவை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் இந்தியா கூட்டணிக் கட்சியினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மக்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி எம்.பி., ‘மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச மறுப்பதால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, பிரதமரைப் பேச வைக்க நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் தயாராக இருக்கிறது. இந்த நோட்டீஸ் நாளை (26.07.2023) காலை 10 மணிக்கு முன்பாகவே மக்களவைச் செயலகத்திற்கு வந்து சேரும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறது. இதையொட்டி மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை இன்று காலை வழங்கியுள்ளது. காங்கிரஸ் மக்களவைத் துணைத் தலைவரும் அசாம் மாநில முன்னாள் முதலமைச்சரும் தருண் கோகோயின் மகனுமான கௌரவ் கோகோய் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியின் அனைத்து மக்களவை உறுப்பினர்களும் இன்று அவைக்கு வர உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.

மக்களவையில் 50 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தவுடன் இந்தத் தீர்மானம் விவாதத்திற்குப் பட்டியலிடப்படும். மக்களவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் இது குறித்து விவாதித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT