Skip to main content

'இந்தியா என்ற பெயருக்குத் தடை இல்லை' - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

'No ban on name India'-Supreme Court's plan

 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். பல கட்டங்களாக ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது.

 

தொடர்ந்து 26 எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கொடுத்த பரிந்துரையின் பேரில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA) எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி (INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE) என்பதன் சுருக்கமே (INDIA) இந்தியா என எதிர்க்கட்சிகள் விளக்கமளித்திருந்தன.

 

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்ற பெயரை வைக்கக்கூடாது. எனவே இந்த பெயரிலான கூட்டணிக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 'இந்தியா' எனப் பெயர் வைக்கத் தடை இல்லை எனத் திட்டவட்டமாகக் கருத்து தெரிவித்ததோடு, பொதுநல மனுத் தாக்கல் செய்த மனுதாரருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. விளம்பரத்திற்காக இந்த மனு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

'விட்டால் திருப்பூரையும் மணிப்பூர் ஆகிவிடுவார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'If BJP enterTirupur will also become Manipur' - Chief Minister M.K.Stal's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய முதல்வர் ,''பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அரசமைப்பு சட்டத்தை மாற்றி விடுவார்கள்.  மோடியின் பாஜக அரசு வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு. கலவரம் செய்வது பாஜகவின் டிஎன்ஏவில் ஊறிப்போய் உள்ளது. பாஜகவை உள்ளே நுழையவிட்டால் சமூக அமைதியைக் கெடுத்து விடுவார்கள். அதிகாரத்தில் உள்ள பாஜக வென்றால், திருப்பூரை மணிப்பூர் ஆக்கி விடுவார்கள். பன்முகத்தன்மைக் கொண்ட இந்தியாவை பிரதமர் மோடி சிதைக்க பார்க்கிறார். சமூகநீதி என்ற வார்த்தையே பிரதமர் மோடிக்கு அலர்ஜியாக உள்ளது.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இட ஒதுக்கீட்டைத்தான் காலி செய்வார். வருகின்ற மக்களவைத் தேர்தல் இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடக்கின்ற போர். வீழ்ச்சிதான் மோடியின் சாதனை. மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நிம்மதியாக நடமாட முடிகின்றதா? ஊடக நிறுவனங்களால் நிம்மதியாக செயல்பட முடிகிறதா? தங்களுக்கு கட்டுப்படவில்லை என்றால் ஒட்டுமொத்த நிறுவனங்களை விலைக்கு வாங்கி  பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவுவார்கள். உண்மையை எழுதும் பத்திரிகையாளர்களை சிறையில் அடைப்பது, அவர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பது எனப் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவு தான் இன்று ஊடகச் சுதந்திரத்தில் 180 நாடுகளில் 161 வது இடத்தில் இந்தியா இருக்கிறது. நம்முடைய பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி எவ்வளவு பெரிய அவமானம் ஏற்படுத்தி இருக்கிறார். மோடி சொன்ன புதிய இந்தியா அவருடைய ஆட்சியில் எப்படி இருக்கிறது? 32 விழுக்காடு மக்கள் ஊட்டச்சத்து குறைவோடு இருக்கிறார்கள். 44 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தவில்லை. 30 விழுக்காடு மக்கள் அடிப்படை சுகாதார வசதி இல்லாமல் வாழ்கிறார்கள். 41 விழுக்காடு மக்களுக்கு வீடுகள் இல்லை. இப்படித்தான் உள்ளது மோடி சொன்ன புதிய இந்தியா.

மோடி ஆட்சியில் தானியங்களின் விலை 54 விழுக்காடு அதிகமாகிவிட்டது. பால் பொருட்களின் விலை 53 விழுக்காடு அதிகம், எண்ணெய் விலை 48 விழுக்காடு அதிகம், காய்கறி விலை 48 விழுக்காடு அதிகம், மருத்துவ செலவுகள் 71 விழுக்காடு அதிகம். கல்விச் செலவுகள் 60 விழுக்காடு அதிகம். இதெல்லாம் மோடி சொன்ன வளர்ச்சியா? 10 ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தோம் எனச் சொல்லிக் கொள்ளும் பாஜக, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதனால்தான் எந்த மேடையிலும் திட்டங்களையும், சாதனைகளையும் சொல்ல முடியவில்லை. ஆனால் திராவிட மாடலாட்சியைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டில் கஜானாவை தூர்வாரிய அதிமுகவினால் ஏற்பட்ட நிதிச் சுமை; ஒன்றிய பாஜக அரசு தரும் நிதி நெருக்கடி ஆகியவற்றை மீறி ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறோம்'' என்றார்.