
அரசு நிகழ்ச்சியில் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலையில் முதல்வர் நிதிஷ் குமார் பூந்தொட்டி வைத்த செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர்.
இந்த நிலையில், பாட்னாவில் அரசு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது மாநில கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.சித்தார்த், முதல்வர் நிதிஷ் குமாருக்கு பூந்தொட்டி கொடுத்த வரவேற்றார். அந்த பூந்தொட்டியை வாங்கிய நிதிஷ் குமார், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அதை எஸ்.சித்தார்த் தலையில் வைத்து சிரித்தார். இது அங்கு இருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. பார்வையாளர்கள் சிரித்ததைக் கேட்டு, எஸ்.சித்தார்த் உடனடியாக பூந்தொட்டியை கையில் எடுத்துக் கொண்டு நடந்து சென்றார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி தலையில் முதல்வர் நிதிஷ் குமார் பூந்தொட்டி வைத்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி கூறுகையில், “நிதிஷ் குமாரின் செயல்பாடுகள் மாநிலத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துகின்றன. அவரது மனம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை காட்டுகிறது” என்று கூறினார். கடந்த மார்ச் மாதம், பாட்னாவில் நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவின் போது தேசிய கீதம் இசைத்த போது சிரித்தபடியும் பேசியபடியும் நிதிஷ் குமார் நடந்து கொண்டு சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.