Nitish Kumar has said that early elections to Parliament may be held

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராகக்கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தனர்.

Advertisment

இதற்கிடையில் பீகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

இது தொடர்பாகச் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப்பேசினார். இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து ஓரணியாகச் செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 23 ஆம் தேதி பீகாரில் பிரமாண்டமாகப் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அழைப்புகளும் முறைப்படி எதிர்க்கட்சிகளுக்கு விடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த மத்திய பாஜக அரசுக்கு விருப்பம் தான். கர்நாடக மாநிலத்தில் நடந்ததைப் போல மற்ற மாநிலங்களில் நடந்துவிட்டால் என்ன செய்வது என்றும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுப்பெற்றுவிட்டால் நாம் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள் முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம்” என்றார்.