Nitish Kumar begged the IAS officer in bihar

Advertisment

பீகார் மாநிலத்தில், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை எளிதாக்குவதற்காக ஆற்றின் குறுக்கே ஜே.பி.கங்கா பாதை என்ற பாதை திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் ஒரு பகுதி முடிவடைந்ததை தொடர்ந்து, அந்தச் சாலைகளை அர்பணிக்கும் நிகழ்ச்சி பாட்னவில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா ​​மற்றும் எம்.பி ரவிசங்கர் பிரசாத் போன்ற உயரதிகாரிகள் கலந்து கொண்டு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.

இதில் முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், “இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து வேலைகளும் முடிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். நீங்கள் விரும்பினால் நான் உங்கள் கால்களில் கூட விழுகிறேன்” என்று கூறியபடி அங்கிருந்த அதிகாரி ஒருவரை நோக்கி நிதிஷ்குமார் நெருங்கினார். இதனைச் சுதாரித்துக் கொண்ட அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, சில அடிகள் பின்வாங்கி., ‘சார், தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்’ எனப் பதற்றத்துடன் கூறினார். நிதிஷ்குமார் அதிகாரியை நோக்கி நெருங்கி வந்ததைக் கண்ட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

இது குறித்து அம்மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, “எந்த அதிகாரியோ, ஒப்பந்ததாரரோ நேர்மையாக பணி செய்யவில்லை என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் கைகளை கூப்பி பிச்சை எடுக்கக்கூடாது. முதல்வர் தன்னை அல்ல, பதவியை அவமதிக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.