
திட்ட ஆணையத்திற்கு மாற்றாக நிதி ஆயோக் எனும் அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குதல், திட்டங்களை வடிவமைத்தல் போன்ற முக்கிய பணிகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் நரேந்திர மோடி (ex officio chairman) செயல்படுகிறார். அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டமன்றங்களுடன் கூடிய யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களைக் கொண்ட நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு குழு அமைக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆட்சி மன்ற குழுவின் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், 10வது ஆண்டாக இந்த ஆண்டும் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (24.05.2025) இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் ‘2047இல் வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற தலைப்பில், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மரபு சாரா எரிசக்தி உருவாக்கம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் தங்களது மாநிலங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதி குறித்து அவர் வலியுறுத்திப் பேச உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
அதே போன்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். அதே சமயம் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு நடந்த 2022, 2023 மற்றும்2024 என 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.