ADVERTISEMENT

ஜெ.வின் பாதையில் நித்யானந்தா 

09:06 PM Feb 01, 2020 | kalaimohan

ஜெயலலிதாவிற்கு சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை கொடுத்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் பிடியில் நித்தியானந்தா சிக்கியுள்ளார்.

நித்யானந்தாவிற்கு எதிராக ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் 50 வாய்தாக்களுக்கு பிறகும் நித்யானந்தா ஆஜராகவில்லை, அவருக்கு எதிராக எந்த பிடிவாரண்டையும் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பிக்கவில்லை, அதேபோல் அவரைக் கைது செய்து அவரை விசாரணைக்கு ஆஜராக்கும் வேலையை கர்நாடக மாநில சிஐடி போலீசாரும் செய்யவில்லை எனவே அந்த வழக்கின் புகார்தாரான லெனின் கருப்பன் நித்தியானந்தாவிற்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யுங்கள், இந்த வழக்கில் அவர் ஆஜராக மறுக்கிறார், நான் இரண்டுமுறை வழக்கிற்கு ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பித்து விடுகிறார்கள் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இதேபோல இன்னொரு வழக்கும் தொடுத்திருந்தார், அதாவது இந்த வழக்கை ராம்நகர் நீதிமன்றத்தில் இருந்து மாற்றுங்கள் என்ற வழக்கையும் அவர் தொடுத்திருந்தார். இதில் நித்தியானந்தாவின் பிணையை ரத்து செய்யுங்கள் என்ற கோரிக்கை வைக்கப்பட்ட வழக்கு ஜெயலலிதாவிற்கு சிறைதண்டனை விதித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

எடுத்த எடுப்பிலேயே லெனின் கருப்பனின் வழக்கறிஞர் இந்த வழக்கை பற்றி விவரிக்கத் தொடங்கினார். எனினும் முன்னேற்பாடாக வழக்கு தொடர்பான விவரங்களை விரிவாக படித்துவிட்டு வரும் வழக்கத்தை வைத்திருக்கும் ஜான் மைக்கேல் குன்ஹா, நான் இந்த வழக்கு விவரங்களை படித்து விட்டேன் நீங்கள் விளக்க தேவையில்லை என அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து, அவர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் விளக்கம் கேட்டு ஒருவித உத்தரவைப் பிறப்பித்தார். அந்த உத்தரவில் 50 வாய்தாக்களுக்கு மேலாக நித்யானந்தா ஆஜராகவில்லை, அவர் இந்த நாட்டில் இல்லை என ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட பிறகும் விசாரணைக்கு வந்த வழக்கில் நித்தியானந்தா ஆஜராகாமல் உடல்நிலை சரியில்லை என காரணம் காட்டி உள்ளார். அந்த காரணத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். அவர் எந்த நாட்டில் இருக்கிறார், அவருக்கு என்ன உடல்நிலை சரியில்லை, அதற்கு அவர் எங்கு சிகிச்சை பெறுகிறார் போன்ற விவரங்களை கேட்ட நீதிபதி, எந்த அடிப்படையில் 50 முறை அவர் வழக்கில் ஆஜராக வில்லை என்றாலும் அவருக்கு எதிராக ஏன் பிடிவாரண்ட் ஒருமுறைகூட பிறப்பிக்கப்படவில்லை. அதே நேரத்தில் 2 முறை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத லெனின் கருப்பனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளீர்கள். இது எப்படி நடந்தது உடனடியாக விளக்கம் சொல்லுங்கள் என ஒரு உத்தரவை பிறப்பித்தார்.


அடுத்தபடியாக இந்த வழக்கை விசாரிக்கும் கர்நாடக மாநில சிஐடி பிரிவு அதிகாரியை கூப்பிட்டு அந்த அதிகாரியிடம் இந்த வழக்கு என்பது நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கு. ஒருவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றால் அவரை அழைத்து விசாரிக்க வேண்டும் அல்லது அவர் தரப்பு கருத்தை நீதிமன்றம் கேட்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது, எனவே நித்தியானந்தாவிற்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்புங்கள் என உத்தரவிட்டார்.

அதற்கு அந்த விசாரணை அதிகாரி, அப்படி எங்களால் நேரடியாக சம்மன் அனுப்ப முடியாது. அவருடைய முகவரி பிடதி ஆசிரமம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மடத்திற்கு சம்மன் அனுப்பினால் அங்கு அவர் இல்லை என பதில் வருகிறது. ஆகவே எங்களால் நேரில் செல்ல முடியாது. அவர் இந்தியாவில் இல்லை, அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். மேலும் திங்கள் கிழமைக்குள் நேரில் சம்மன் கொடுக்க உத்தரவிட்டுள்ளீர்கள். சனி ஞாயிறு விடுமுறை அதனால் எங்களால் சம்மன் கொடுக்க முடியாது என்று விசாரணை அதிகாரி தெரிவித்தார்.


போலீசாருக்கு சனி ஞாயிறு விடுமுறை எல்லாம் கிடையாது. ஆகவே நித்தியானந்தாவிற்கு, அவர் எந்த நாட்டில் இருந்தாலும் சரி, எங்கிருந்தாலும் சரி சம்மன் அனுப்பி அவரை அழைத்து வாருங்கள் இல்லை என்றால் இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என திங்கள்கிழமை மதியம் இரண்டரை மணிக்குள் எனக்கு கோர்ட்டில் ஆஜராகி தெரியப்படுத்துங்கள் என உத்தரவிட்டார்.

குன்ஹா கொடுத்த இந்த இரண்டு உத்தரவுகளும் பெரிதாகப் பேசப்படுகிறது. நித்யானந்தா வழக்கை முன்னர் விசாரித்து வந்த நீதிபதியிடம் கர்நாடகாவின் மூத்த வழக்கறிஞர்கள் நித்தியானந்தாவிற்கு ஆதரவாக தீர்ப்புகளை பெற்று வந்திருந்தனர். அதுபோல ஜான் மைக்கேல் டி குன்ஹாவை யாராலும் அணுக முடியவில்லை. இந்த விஷயத்தில் மிகவும் சீரியஸாகவும், தெளிவாகவும் இருக்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயலலிதா ஊழல் வழக்கு 18 வருடம் நீண்டது. அதை ஒரே வருடத்தில் முடித்து ஜெயலலிதாவுக்கு சிறைதண்டனை பெற்றுக் கொடுத்தவர் குன்ஹா. அந்த வழக்கில் அவர் எழுதிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உச்சநீதிமன்றமும் குன்ஹாவின் உத்தரவு சரியே என்று உத்தரவிட்டது. அதுபோல இதுவரை சட்டத்திற்கு ஆட்டம் காட்டிவந்த அதே தமிழகத்தைச் சேர்ந்த நித்தியானந்தா குன்ஹாவின் பிடியில் ஜெயலலிதா போலவே சிக்கியிருக்கிறார். இந்தமுறை அவர் தப்ப முடியாது என்று கர்நாடக வழக்கறிஞர்கள் மிகத்தெளிவாகவே கூறுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT