Skip to main content

கரோனா எதிரொலி; பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர்...

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

கரோனா  வைரஸ் பரவலால் தொழில்துறை கடுமையாக முடங்கியுள்ள நிலையில், நிதித்துறை தொடர்பாக பல்வேறு புதிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

 

dd

 

 

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைகளும்,அதற்கான திட்டமிடலும் நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும். அதேநேரம், ஜிஎஸ்டி, சுங்கவரி போன்ற பல்வேறு கணக்குகளைத் தாக்கல் செய்ய தொழிற்துறைக்குக் கூடுதல் அவகாசம்  அளிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டியை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீடிக்கப்படுகிறது. ரூ.5 கோடிக்குக் கீழ் வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு எந்தவிதமான அபராதமும் கிடையாது.

அதேபோல வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீடிக்கப்படுகிறது. காலதாமதமாகத் தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12%இல் இருந்து 9%ஆகக் குறைக்கப்படுகிறது. மேலும், ஆதார் - பான் இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி இறக்குமதி தொழில்களை மேம்படுத்தும் வகையில், ஜூன் 30 வரை 24 மணிநேரமும் சுங்க அனுமதி வழங்கப்படும். அடுத்த மூன்று மாதத்திற்கு எந்த ஏடிஎம்மிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம். வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றாலும் எவ்வித கட்டணமும் பிடிக்கப்படமாட்டாது." எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தி.மு.க. பரபரப்பு புகார்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
DMK on Minister Nirmala Sitharaman Sensational complaint

பா.ஜ.க. சார்பில் கோவையில் நேற்று (18.03.2024) நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தன.

தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் மோடி கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதே சமயம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பிரதமரின் கோவை வாகனப் பேரணியில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது. மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதற்காகவும் நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களை தி.மு.க. அழிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவதூறு பரப்பி, வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசுகிறார். உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி தி.மு.க.வின் மீது அவதூறுகளைப் பரப்பியதாக நிர்மலா சீதாராமன் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்துள்ளார்.

DMK on Minister Nirmala Sitharaman Sensational complaint

அந்தப் புகாரில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 16.03.2024 அன்று மாலை 05.30 மணிக்கு யூடியூப் சேனல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அந்த உரை சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது நிர்மலா சீதாராமன் தனது உரையின் போது திராவிட முன்னேற்றக் கழகம் பற்றிய உண்மைகளைத் திரித்து விமர்சித்தார். அதாவது, ‘நமது கோயிலையே அழிக்கக் கூடிய, நமது கோயிலையே சுரண்டித் தின்னக் கூடிய, நமது மதத்தையே அழிப்பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கெல்லாம் ஏன் ஓட்டு போடுறீங்க’ எனப் பேசியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

புதுச்சேரியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கும் மத்திய அமைச்சர்?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Union Minister Nirmala Sitharaman contest in Puducherry

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் நட்சத்திர வேட்பாளராக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது

அதே சமயம் மீதமுள்ள மக்களவைத் தொகுதிக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க.விற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக நேற்று (03.03.2024) அறிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக புதுச்சேரிக்கு இன்று (04.03.2024) வருகை தந்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பா.ஜ.க.வினர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜகவினர் தெரிவித்த 3 வேட்பாளர்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரும் இடம் பெற்றிருந்த நிலையில், மற்ற இரு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.