நாடு முழுவதும் கரோனாவால் முடங்கிப்போயுள்ள சூழலில், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலின் திருமணம் இன்று நடைபெற்றது.

Advertisment

Nikhil Kumarswamy marriage amid corona lockdown

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் 13,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் மிகவேகமாகப் பரவி வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்குக்கு மத்தியில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலின் திருமணம் இன்று நடைபெற்றது.

குமாரசாமியின் ராம் நகர் பண்ணைவீட்டில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வீட்டுவசதித்துறை அமைச்சரான எம். கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதியை கரம் பிடித்தார் நிகில் குமாரசாமி. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இன்று நடைபெற்ற இந்தத் திருமணம் சர்ச்சையாகியுள்ளது.

Advertisment

http://onelink.to/nknapp

குறைவான விருந்தினர்களே அழைக்கப்பட்டிருந்தாலும், திருமணத்தின்போது அவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காது கூட்டமாக அருகருகே நின்றிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புகைப்படங்களை மேற்கோள்காட்டி பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஒரு மாநிலத்தின் பொறுப்புமிக்க இடத்தில் இருக்கும் ஒரு நபர், அரசின் வழிகாட்டுதல்களைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்வாறு செய்வது தவறு எனவும் கருத்துக்கள் எழுந்து வருகின்றன.