news of the plane crash is heartbreaking  say PM Modi

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 10வது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் இருந்த நிலையில் 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே விமானம் வானிலேயே செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் அந்த பகுதியில் இருந்த மருத்துவ கல்லூரியின் மாணவர்களின் விடுதி பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தின் போது விடுதியில் இருந்த மாணவர்கள் சிலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே விமானத்தில் பயணித்த குஜராத் மாநில முன்னால் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்க அவர் இந்த விமானத்தில் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் அதிதீவிரமாக நடந்து வரும் நிலையில் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விமான விபத்திற்கு குடியரசுத் தலைவர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் பிதமர் வெளியிட்டுள்ள பதிவில், “அகமதாபத் துயர சம்பவம் நம்மை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கி உள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயம் நொறுங்கியது. களத்தில் இருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.