கர்நாடகாவில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், மாணவியை கல்லூரி முதல்வர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் விஸ்வேஷ்வராய ஜூனியர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் கடந்த மூன்றாம் தேதியன்று 17 வயது மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடமும் மாணவியின் பெற்றோரிடமும் தெரிவித்தனர். தகவல் அறிந்து கல்லூரிக்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவியின் தோழிகள், விடுதி காப்பாளர்கள், பணியாளர்கள் என அனைவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதனிடையே மாணவியின் பெற்றோர் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், காவல்துறையின் விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தது. கல்லூரியின் முதல்வராக இருந்த ரமேஷ் அந்த விடுதியின் காப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் பல மாணவிகளிடம் அத்துமீறி நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதேபோல் உயிரிழந்த மாணவியையும் கல்லூரி முதல்வர் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனால் மன உளைச்சளுக்கு ஆளான மாணவி மாற்றுக் கல்லூரி தேடியதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த கல்லூரி முதல்வர் மாணவியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்தது போல் மாட்டி வைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கை சந்தேக மரணத்தில் இருந்து கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கல்லூரி முதல்வரைத் தேடி வந்த நிலையில், வேறு மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். தற்கொலை செய்து கொண்ட மாணவி போல் வேறு மாணவிகள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனரா என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.