New Parliament Building The central government introduced the first bill

Advertisment

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இன்று முதல் (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற்று வருகிறது.

அதே சமயம் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதலையும் பெற்றிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மசோதா நிலுவையிலேயே உள்ளது. இதையடுத்து இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வந்து மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இந்த இடஒதுக்கீட்டு சட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

New Parliament Building The central government introduced the first bill

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறிய பிறகு, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நாளை தொடங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.