/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1201.jpg)
புதுச்சேரி மாநிலத்துக்கான ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகக் கட்டடம் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு இடத்தில் கட்டுவது தொடர்பாகஅதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பேரவைத் தலைவர் அரசு செயலாளர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து புதிய சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ள இடத்தில், தற்போது இயங்கிவரும் அரசுத் துறை அலுவலகங்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், "புதிய சட்டப்பேரவை அலுவலகம் கட்டுவதற்கு மக்களவைத் தலைவர் வாயிலாக மத்திய அரசிடம் 360 கோடி ரூபாய் நிதியுதவி கேட்டிருந்தோம். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சட்டப்பேரவை அலுவலக கட்டடம், புதுச்சேரி தட்டாஞ்சாவடி வணிக வளாகப் பகுதியில் உள்ள 15 ஏக்கர் இடத்தில் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அங்கு பிரம்மாண்ட சட்டப்பேரவை அலுவலகம் கட்டுவதற்கு அரசுத்துறை அதிகாரிகள், முதல்வர் என். ரங்கசாமி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இதற்கான சட்டப்பூர்வ அனுமதி பெறுவதற்கு, அடுத்த வாரம் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் டெல்லி செல்கிறோம். மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி ஒப்புதல் பெற்றுவர உள்ளோம்.ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு மேல் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. அதற்காக ஆயத்தப்பணி மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது. 16 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும், தலைமைச் செயலகமும் அந்த வளாகத்தில் அமையும்" என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)