
25-ஆம் தேதி முதல் துவங்கும் உள்நாட்டு விமான போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்குப் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வரும் சூழலில், மே 25 முதல் உள்நாட்டு விமான போக்குவரத்துத் துவக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி நேற்று அறிவித்தார். இதற்காக அனைத்து விமான நிறுவனங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், படிப்படியாக விமானச் சேவை முழு அளவில் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார். இந்நிலையில் 25-ஆம் தேதி முதல் துவங்கும் உள்நாட்டு விமான போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்குப் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, உடல் வெப்ப நிலையை அளவிடும் தெர்மல் ஸ்கிரீனிங் பகுதி வழியாகவே பயணிகள் விமான நிலையத்திற்குள் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 14-வயதிற்குட்பட்ட சிறுவர்களைத் தவிர மற்ற அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் வைத்திருக்க வேண்டும். விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.