New election commissioners take charge

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இதற்கிடையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், தேர்தல் ஆணையர்கள் நியமனம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. அந்த தீர்ப்பில், ‘பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும். அவர்களைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்வார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான புதிய சட்டம்கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தின்படி, பிரதமர், பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யும் நபர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவர் என்று கூறப்பட்டது. இதில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரைஇடம்பெறச் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி ஓய்வு பெற்றார். தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இந்த திடீர் ராஜினாமாவை அடுத்து, புதிய தேர்தல் ஆணையர்களாக இருவரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று (14-03-2024) நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த தேர்வு குழுவில், சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இருந்தனர். காலை கூடிய இக்குழு, புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து ஆகியோரை தேர்வு செய்தது.

Advertisment

New election commissioners take charge

இதனையடுத்து, நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்திய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை நியமித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இதற்கான அரசாணையைமத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது. இந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் இன்று (15-03-24) பொறுப்பேற்றுக்கொண்டனர்.

மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உடன் சந்திப்பு மேற்கொண்டனர். இதனையடுத்து, மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், புதிதாக பொறுப்பேற்ற 2 தேர்தல் ஆணையர்கள், ஆணைய செயலர்கள் உள்ளிட்டோர் இன்று காலை 11 மணிக்கு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.