New cabinet sworn in in Madhya Pradesh

Advertisment

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பா.ஜ.க தக்கவைத்துக் கொண்டது. போபாலில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் மத்தியப் பிரதேச முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கடந்த 13 ஆம் தேதி (13-12-2023) போபாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றார். மேலும் துணை முதலமைச்சர்களாக ஜகதீஷ் தேவதா மற்றும் ராஜேந்திரா சுக்லா ஆகியோர் பதவியேற்றனர்.

அதே சமயம் மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் பதவியேற்று 10 நாட்கள் கடந்த நிலையில் அமைச்சர்கள் பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் 28 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை இன்று (25.12.2023) பதவியேற்றுகொண்டது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் மங்குபாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் 11 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், பட்டியல் பிரிவில் 5 பேரும், பட்டியல் பழங்குடியினர் பிரிவில் 3 பேரும் ஆவர்.