நேதாஜி பிறந்தநாள்- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

Netaji's birthday - Praise to Prime Minister Narendra Modi!

தேசத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய பணிகளைக் கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் அடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125- வது பிறந்தநாள் இன்று (23/01/2022) கொண்டாடப்படும் நிலையில், அவருக்கு தலைவணங்கி மரியாதைச் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்குகிறேன். நமது தேசத்திற்கு நேதாஜி ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கு ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் முப்பரிமாண ஒளி வடிவிலான சிலையை பிரதமர் இன்று திறந்து வைக்க உள்ளார். இந்த சிலை, தற்காலிகமாக அமையவுள்ள நிலையில், பின்னர் அந்த இடத்தில்நேதாஜியின் கிரானைட் சிலை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 அடி உயரம், 6 அடி அகலம் கொண்ட சிலையை வடிவமைக்கும் பொறுப்பு, தேசிய நவீன கலைகள் அருங்காட்சியகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நேதாஜியின் 125- வது பிறந்தநாளில் அவருக்கு இந்தியா நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது. நேதாஜியின் லட்சியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் ஊக்கமளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125- வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, அவரது சிலை நிறுவப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23- ஆம் தேதியை தேசிய அரசு விடுமுறையாக அறிவிக்க, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tweets
இதையும் படியுங்கள்
Subscribe