Skip to main content

வலுக்கட்டாயமாக ஜெய்ஸ்ரீராம் எனக் கோஷமிட வைக்கப்பட்ட நபர்... வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சை...

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

nepali man forced to chant jaishriram in varanasi

 

வாரணாசியில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக மொட்டையடித்து ஜெய்ஸ்ரீராம் எனக் கோஷமிட வைத்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. 

 

இந்தியா, நேபாளம் இடையான உறவில் எல்லைப்பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, அண்மையில் கூட்டம் ஒன்றில் பேசிய நேபாள பிரதமர் சர்மா ஒலி, ராமர் இந்தியர் இல்லை எனவும், அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், வாரணாசியில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக மொட்டையடித்து ஜெய்ஸ்ரீராம் எனக் கோஷமிட வைத்துள்ளனர். 

 

இதுதொடர்பாக வெளியான வீடியோவில், அடையாளம் தெரியாத நேபாளி நபர் ஒருவர் ஆற்றின் அருகே அமரவைக்கப்பட்டு, சர்மா ஓலி மற்றும் நேபாளத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்ப வற்புறுத்தப்பட்டது பதிவாகியுள்ளது. நேபாளி மொழியில் பேசும் அந்த நபர், ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கோஷமிடவும் தூண்டப்படுகிறார். மேலும், விஸ்வ இந்து சேனாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்ப அவர் வற்புறுத்தப்பட்டுள்ளார்.

 

இதனையடுத்து, "நேபாள பிரதமர் எங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கவில்லை, எனவே நாங்கள் சம்பாதிக்க இந்தியா வந்தோம். எங்கள் உரிமைகளை ஏன் பறிக்கிறீர்கள்? நிறைய நேபாளிகள் வெளிநாடு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்தியாதான் எங்களுக்கு ஆதரவு வழங்கியது” என அந்த நபர் சொல்வதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது. இந்தக் காணொளி இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாரணாசி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி’ - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
varanasi Court orders Hindus allowed to worship in Gnanavabi Masjid

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி என்னும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் ஒன்று உள்ளது. இங்கு இந்து மதக் கடவுளான சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மசூதியில் கண்டறியப்பட்ட லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்கத் தடயவியல் பரிசோதனை செய்ய அனுமதிக்கக்கோரி 5 பெண்கள் சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து இருந்தது. அதன்படி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே தொல்லியல் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொழுகை நடத்த எந்தத் தடையும் இதனால் ஏற்படக்கூடாது எனத் தெரிவித்து இருந்தது. மசூதி முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருந்தது. மேலும், தடய அறிவியல் ஆய்வறிக்கையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு முன் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து, ஞானவாபி மசூதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறைக்கு இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும், வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், ஞானவாபி மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனிடையே, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு அனுமதி அளித்ததன் அடிப்படையில், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், ஞானவாபி மசூதியில் 55 இந்து தெய்வ சிற்பங்கள் கண்டறியப்பட்டதாக விவரிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு நேற்று (31-01-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என அதிரடி உத்தரவை வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும், அங்கு வழிபாடு நடத்துவதற்காக அர்ச்சகரை நியமிக்க காசி விஸ்வநாதர் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது. இந்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அடுத்த 7 நாள்களுக்கு அங்கு பூஜைகள் நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வாரணாசி நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகம் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

Next Story

நேபாளம் நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கையால் மக்கள் அச்சம்

Published on 04/11/2023 | Edited on 05/11/2023

 

Nepal Earthquake; People fear due to rising death toll

 

நேபாளத்தின் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

 

இந்த  நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்பட்டது. 

 

இந்த நிலையில், காயமடைந்தவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அந்த மருத்துவமனை நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150யை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்கு வெளியே தங்கியிருக்கின்றனர்.