ADVERTISEMENT

இடஒதுக்கீடு விவகாரம்: முதுநிலை மருத்துவ கலந்தாய்வை நிறுத்திய உச்ச நீதிமன்றம்!

02:34 PM Oct 25, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவதில் வருமான உச்சவரம்பாக 8 லட்சத்தை நிர்ணயித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினரின் குடும்ப வருமானம் 8 லட்சமாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்தால் 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர முடியாது. அதேபோல் ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய மருத்துவ படிப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது அவ்வப்போது விசாரிக்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில் இன்று (25.10.2021) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், எதை அடிப்படையாக வைத்து பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 8 லட்ச ரூபாய் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டது எனவும், ஓபிசி இடஒதுக்கீட்டிற்கான கிரீமிலேயர் வரம்பு 8 லட்ச ரூபாயாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு சமூக மற்றும் கல்வி பின்னடைவுகள் இல்லாதபோது, அவர்களுக்கும், அப்பின்னடைவுகளைக் கொண்ட ஓபிசி பிரிவினருக்கும் ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டது எப்படி எனவும் கேள்வியெழுப்பினர்.

தொடர்ந்து நீதிபதிகள், எதன் அடிப்படையில் 8 லட்ச ரூபாய் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு மத்திய அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டதோடு, வழக்கை வரும் அக்டோபர் 28ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

இதற்கிடையே முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று (அக்டோபர் 25) தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இடஒதுக்கீடு சம்மந்தமான வழக்கில் முதுநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர், கலந்தாய்வு நடைபெற்றால் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மாணவர் சேர்க்கை நடைமுறை முடிந்துவிடும் என்பதைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அகில இந்திய கோட்டாவில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில் தாங்கள் தீர்ப்பளிக்கும் வரையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நிறுத்திவைப்பதாக உத்தரவாதம் அளிக்க மத்திய அரசை அறிவுறுத்தினர். இதனையடுத்து, மத்திய அரசும் அவ்வாறே உத்தரவாதம் அளித்துள்ளது. இதனால் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT