Skip to main content

புறக்கணித்த கலைஞர்களின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட தேசிய விருது!

Published on 06/05/2018 | Edited on 06/05/2018

விருது நிகழ்ச்சியைப் புறக்கணித்த கலைஞர்களின் வீடுகளுக்கு தேசிய விருது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

Ramnath

 

இந்திய திரைத்துறையில் சிறந்து விளங்கும் திரைக்கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு தேசிய விருது வழங்கும் விழா கடந்த வியாழக்கிழமை, டெல்லியில் உள்ள விக்யான் பவனில் வைத்து நடைபெற்றது.

 

தேசிய விருதினை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கிக்கொண்டிருந்தார். முக்கியமான 11 பேருக்கு விருது வழங்கிய அவர், வேறு வேலை இருப்பதாகக் கூறி சென்றுவிட, அவருக்குப் பதிலாக தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி மற்றும் இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோர் மீதமிருந்தவர்களுக்கு விருது வழங்கத் தொடர்ந்தனர். 

 

இதனால் ஆத்திரமடைந்த 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள், விருது வழங்கும் இடத்தைவிட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தனை ஆண்டுகால வரலாற்றில், குடியரசுத்தலைவர் மட்டுமே விருது வழங்குவார் எனும்போது, பாரம்பரியத்தை மாற்றும்விதமாக நடந்துகொள்வது வேதனையளிப்பதாக கலைஞர்கள் தெரிவித்தனர். 

 

இந்நிலையில், விருது நிகழ்ச்சியைப் புறக்கணித்துச் சென்ற கலைஞர்களுக்கு, தபால் மூலமாக விருதுப்பதக்கமும், சான்றிதழும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விருது விழாவில் கலந்துகொள்ளாத கலைஞர்களுக்கு தபால் வழியாக விருதுகள் அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்றாலும், விருதுகளை தபால் மூலம் அனுப்பும் வேலையையும் தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகமே மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்மிருதி இராணிக்கு போட்டியாக பிரியங்கா காந்தியின் கணவர்?

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Priyanka Gandhi's husband to compete with Smriti Rani?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் பா.ஜ.க சார்பில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி போட்டியிடுகிறார். ஆனால், அதே வேளையில், அவரை எதிர்த்து போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ராபர்ட் வதேரா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அமேதி தொகுதி மக்கள் தங்கள் தவறை புரிந்துகொண்டு விட்டார்கள். அமேதியின் தற்போதைய எம்.பி.யான ஸ்மிருதி ராணி விஷயத்தில் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். ராகுல் காந்திக்கு பதிலாக ஸ்மிருதி ராணியை தேர்ந்தெடுத்தற்காக அமேதி மக்கள் மனம் வருந்துகிறார்கள். 

சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அமேதியின் எம்.பி.யாக வேண்டும் என்று அம்மக்கள் விரும்புகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். நான் அரசியலில் இணைந்தால், அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அந்த தொகுதி மக்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.

2004, 2009 மற்றும் 2014 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின் போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அமேதி, வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேசிய திரைப்பட விருதுகள் - பெயர் மாற்றம்; பரிசுத் தொகை அதிகரிப்பு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
name and prize changed in national film awards

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் 1954ஆம் ஆண்டிலிருந்து தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 1984ஆம் ஆண்டிலிருந்து சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருதும், 1965ஆம் ஆண்டிலிருந்து தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது வழங்கப்பட்டு வருகின்றன. 

ad

இந்த நிலையில் இந்தாண்டு நடக்கவுள்ள 70வது தேசிய விருதுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசுத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது, சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவ்விருது வாங்கும் இயக்குநருக்கு பதக்கமும், ரூ.3 லட்சம் பரிசும் வழங்கப்படவுள்ளது.  

தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்துக்கான நர்கிஸ் தத் விருது, தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விருது பெறும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவருக்கும் பதக்கமும், தலா ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தாதாசாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

சிறந்த படம், முதல் படம், முழுமையான பொழுதுபோக்கு வழங்கும் படம், இயக்கம் மற்றும் குழந்தைகள் படம் வகையில் வழங்கப்படும் சுவர்ண கமல் விருதின் பரிசுத்தொகை ரூ.3 லட்சமாகவும், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம், நடிப்பு பிரிவுகள், சிறந்த திரைக்கதை, இசை மற்றும் பிற பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் ரஜத் கமல் விருதின் பரிசுத்தொகை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சிறந்த அனிமேஷன் படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் படம் ஆகியவை 'சிறந்த ஏ.வி.ஜி.சி. படம்' என்ற ஒரே விருதாக வழங்கப்படுகிறது. சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது. சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதாக மாற்றப்பட்டு பரிசுத்தொகை 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறந்த இசை இயக்கத்துக்கான விருது சிறந்த பின்னணி இசை விருதாக மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு ஜூரி விருது நீக்கப்படுகிறது. 'சிறந்த குடும்ப படம்' என்ற விருது நீக்கப்பட்டு, 'சிறந்த திரைக்கதை' விருது அறிமுகப்படுத்தப்படுகிறது.