Advertisment

"பொதுமக்களை கொல்வதே பாதுகாப்பு படையினரின் நோக்கம்" - நாகலாந்து காவல்துறையின் அதிர்ச்சி எஃப்.ஐ.ஆர்!

nagaland

நாகலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை (04.12.2021) இரவு, தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு அப்பாவிகள்உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அந்தக் கிராம மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் மேலும் ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

Advertisment

தீவிரவாதிகள் என நினைத்து இராணுவம் பொதுமக்களை சுட்டுக்கொன்றது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, மோன் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி, இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

Advertisment

பாதுகாப்புப் படை, அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது. இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய அரசு இந்த சம்பவம் தொடர்பாக உண்மையான பதிலைத் தர வேண்டும் என கோரியுள்ளார். அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ், ஐந்து பேர் கொண்ட குழுவை நாகலாந்து மாநிலத்திற்கு இன்று (06.12.2021) அனுப்பவுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை அந்தக் குழு சந்திக்கவுள்ளது.

நாகலாந்து முதல்வர், இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட சிறப்பு விசாரணை குழு விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள நாகலாந்து காவல்துறையினர், முதல் தகவல் அறிக்கையில், "சம்பவத்தின்போது காவல்துறை வழிகாட்டி (பாதுகாப்புப் படையினருடன்) இல்லை. பாதுகாப்புப் படையினரும் தங்களின் ஆபரேஷனுக்குக் காவல்துறை வழிகாட்டியை வழங்குமாறு காவல் நிலையத்திற்கு கோரிக்கை விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பாதுகாப்புப் படையினரின் நோக்கம் பொதுமக்களைக் கொலை செய்வதும் காயப்படுத்துவதுமே என்பது வெளிப்படை" என கூறியுள்ளனர்.

civilians nagaland security forces
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe