Advertisment

“இந்த மையம் காலியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்” - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!!

publive-image

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்துவைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “புதுச்சேரியில் தற்போது நடைபெற்றுவரும் தடுப்பூசி திருவிழா மிகுந்த ஊக்கத்தைத் தருகிறது. கடந்த 16, 17, 18 ஆகிய தேதிகளில் 44,412 பேர் தடுப்பு செலுத்திக்கொண்டுள்ளனர். இது ஊக்கமளிப்பதாக இருக்கிறது. இதனை மேலும் அதிகப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது.மக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Advertisment

முதல்வர் தன்னையே ஒரு முன்னுதாரணமாக காண்பித்து மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புதுச்சேரி மாநிலத்தை முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ முயற்சியில், 'உயிர்க்காற்று' திட்டம் மூலமாக, புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தக் கோவிட் பாதுகாப்பு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு போதுமான அளவில் ஆக்சிஜன் படுக்கைகள், செயற்கை சுவாச கருவிகள் கொண்ட படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த மையம் காலியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். குழந்தைகளுக்கான கரோனை சிறப்பு சிகிச்சை பிரிவும் தயார் நிலையில் இருக்கிறது.

Advertisment

publive-image

கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் தாக்கும் என்பதில்லை. குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசி போடவில்லை. ஒருவேளை நோய்த் தொற்றால் குழந்தைகள் தாக்கப்பட்டால் அதற்கும் தயாராக இருக்கிறோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை. போதிய அளவு மருந்து கையிருப்பில் இருக்கிறது. பிரதமரின் 'ஆயுஷ்மான்' பாரத் காப்பீட்டு திட்டத்தை மிக விரைவில் புதுச்சேரியில் உள்ள அனைத்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும் வழங்குவதற்கான முயற்சி நடைபெற்றுவருகிறது. பிரதமரின் காப்பீட்டு திட்டம் மிகுந்த பாதுகாப்பைத் தருகிறது. உலகம் முழுவதும் அதிக மக்கள் தொகையால் பயன்படுத்தப்படும் காப்பீட்டுத் திட்டமாக இது இருக்கிறது. அதிகப்படியான நோய்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், சுகாதாரத்துறைச் செயலாளர் அருண் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘ஆயுஷ்மான்’ பாரத் காப்பீடு அட்டை பதிவுசெய்யும் மையத்தை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டு, அந்த திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களின்விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த திட்டத்தின் கீழ் 1.90 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள். தற்போது 60,320 குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் 1,77,366 பேர் பயனடைந்திருப்பதாகவும், மேலும் விடுபட்ட குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அந்தப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்கான அரிசி மற்றும் உதவித் தொகையை மாணவிகளுக்கு தமிழிசை வழங்கினார்.

governor Pondicherry Tamilisai Soundararajan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe