
'கற்களிலும், கட்டிடங்களிலும் எனது தந்தை வாழவில்லை' எனக் கூறி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவரது தந்தை பிஜு பட்நாயக்கின் நினைவிடத்தை அகற்றியதாக அவரது தனிச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜுபட்நாயக் ஒடிசாவின் முதல்வராக இருந்தவர். கடந்த 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி பிஜுபட்நாயக் உயிரிழந்தார். ஒடிசாவின் மிகப்பிரபலமான பூரி நகரில் சொர்கத்துவாரா கடற்கரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சுமார் 600 சதுர அடியில் நினைவிடம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

இந்த நினைவிடமானது பூரி ஜெகநாதர் கோவிலிலிருந்து ஒருமையில் தொலைவில் அமைந்துள்ளது. பூரி தகன பூமியை மேம்படுத்துவதற்காக பிரம்மாண்ட திட்டம் ஒன்று ஒடிசா அரசால் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா முதல்வரின் தனிச்செயலாளரான தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் பாண்டியன் துபாய் சென்றபோது அங்குள்ள ஒடிசா மக்களுடன் கலந்துரையாடினார்.
அப்பொழுது 'பூரி தகன பூமியை மேம்படுத்தும் திட்டத்திற்காக பிஜு பட்நாயக் நினைவிடம் தடையாக இருந்ததாகவும் இதனை தான் நவீன் பட்நாயக்கிடம் எடுத்துக் கூறினேன். அதைக் கேட்டுக்கொண்ட அவர் உடனடியாக தந்தையின் நினைவிடத்தை அகற்ற உத்தரவிட்டதாகவும் கூறினார். மேலும் 'தன்னுடைய தந்தை தான் செய்த பணிகளால் மக்களுடைய மனங்களில் வாழ்கிறாரே தவிர கற்கள், செங்கற்கள், கட்டிடங்களில் வாழவில்லை' என்றும் நவீன் பட்நாயக் தன்னிடம் தெரிவித்ததாக கார்த்திகேயன் பாண்டியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Follow Us