மகாராஷ்டிரா மாநிலம், மும்பை ரயில்களில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி (11.07.2025) 11 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து திடீரென குண்டுகள் வெடித்தன. அதாவது மாதுங்கா சாலை, மாஹிம் சந்திப்பு, பாந்த்ரா, கர் சாலை, ஜோகேஷ்வரி, பயந்தர் மற்றும் போரிவலி நிலையங்களுக்கு அருகில் வெடி குண்டுகள் வெடித்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 189 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழு ஒன்று பொறுப்பேற்றது.
இதனையடுத்து பயங்கரவாதிகளான பைசல் ஷேக், ஆசிப் கான், கமல் அன்சாரி, எஹ்தேஷாம் சித்துகி, நவீத் கான், முகமது சாஜித் அன்சாரி, முகமது அலி, டாக்டர் தன்வீர் அன்சாரி, மஜித் ஷாஃபி, முசம்மில் ஷேக், சோஹைல் ஷேக் மற்றும் ஜமீர் ஷேக் ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மும்பை விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து பைசல் ஷேக், ஆசிப் கான், கமல் அன்சாரி, எஹ்தேஷாம் சித்துகி மற்றும் நவீத் கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மற்ற ஏழு குற்றவாளிகளான முகமது சாஜித் அன்சாரி, முகமது அலி, டாக்டர் தன்வீர் அன்சாரி, மஜித் ஷாஃபி, முசம்மில் ஷேக், சோஹைல் ஷேக் மற்றும் ஜமீர் ஷேக் ஆகியோருக்கு சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி 12 பேரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து அளிக்கப்பட்ட தீர்ப்பில் இந்த வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த 12 பேர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.