Skip to main content

கோர விபத்தில் சிக்கியும் ஆம்புலன்ஸிலேயே தேர்வெழுதிய மாணவி

 

mumbai tenth std school girl wrote exam in ambulance

 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த முபாசிரா சாதிக் செய்யது என்பவர் அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 10 ஆம் படித்து வருகிறார். தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் சில தேர்வுகளை எழுதி வந்துள்ளார். இவ்வாறு தேர்வுகளை எழுதிவிட்டு வீட்டிற்குச் செல்ல தேர்வு மையத்தில் இருந்து வெளியில் வந்து சாலையைக் கடக்கும் போது மாணவியின் மீது கார் மோதி, அவரின் காலின் மீது ஏறியதால் படுகாயம் அடைந்த மாணவியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மாணவியை இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தினர். இருப்பினும், மாணவி பொதுத்தேர்வை எழுதுவதில் உறுதியாக இருந்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தேர்வு வாரியத்திடம் மாணவிக்கு சிறப்பு அனுமதி கேட்டனர். இதனைத் தொடர்ந்து தேர்வு வாரியமும் மாணவி தேர்வு எழுத அனுமதி வழங்கியது.

 

அதன்படி ஆம்புலன்சில் தேர்வு மையத்திற்கு வந்த மாணவிக்கு ஆம்புலன்சில் வைத்தே தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. வினாக்களை படித்த மாணவி அதற்குரிய பதில்களை 9 ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவியிடம் கூற அந்த மாணவி விடைகளை எழுதினார். அப்போது பள்ளியின் முதல்வர் கண்காணிப்பாளராக உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. தன்னம்பிக்கையுடன் மாணவி தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !