
மகாராஷ்டிராவில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்களான சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவி வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு செய்தி வந்தது. அதில், மும்பை முதல்வர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் வந்ததை அடுத்து, மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
கடந்த வாரம், மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் வந்தது. ஏக்நாத் ஷிண்டேவின் வாகனம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று மும்பை கோராகான் போலீஸுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வருக்கு மிரட்டல் வந்துள்ளது என்பது மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.