முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்; உச்ச நீதிமன்ற நீதிபதி முக்கிய கருத்து!

Mullai Periyar Dam Safety Issue; Supreme Court judge's opinion

உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையிலிருந்து வருகிறது. இத்தகைய சூழலில் மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தை ஒரு தரப்பினராகக் கொண்டு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனக் கேரளாவைச் சேர்ந்த சாய் ஜோஷப் என்பவர் உச்சநீதிமன்ற மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ரிஷிகேஷ் ராய் அமர்வில் இன்று (28.01.2025) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மற்றொரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு நிபுணர் குழுவை நியமித்து இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அமர்வுக்குப் பரிந்துரைக்க வேண்டும்” என வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பருவ மழைக்காலம் வர உள்ளது. அதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்” என வாதத்தை முன் வைத்தார்.

இதனைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி ரிஷிகேஷ் ராய், “130 ஆண்டுகளுக்கு மேல் ஆன முல்லைப் பெரியார் அணை, எத்தனை பருவமழையைக் கண்டுள்ளது. இன்னமும் நிலையாக உள்ளது. முல்லைப் பெரியார் அணை உடைந்துவிடும் என்ற அச்சத்தில் மக்கள் இருப்பதாகக் கூறுவது, காமிக்ஸ் கதைகளைப் போன்ற அச்ச உணர்வாக இருக்கும் என நினைக்கிறேன். நானும் கேரளாவில் வசித்திருக்கிறேன். நம் வயதை விட இரு மடங்கு வயதிலும் நிலையாகவும், உறுதியாகவும் உள்ளது. அணையைக் கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், “அணை மிகவும் பழமையானது. ஒருவேளை அணை உடைந்தால் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். லட்சக்கணக்கான உடைமைகள் பறிபோகும். எனவே அணையை ஆய்வு செய்து அதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “அணை இத்தனை காலம் பாதுகாப்பாகத் தான் உள்ளது. இருப்பினும் இந்த வழக்கை ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக விசாரித்துவரும் மற்றொரு அமர்வில் பட்டியலிட உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.

Kerala
இதையும் படியுங்கள்
Subscribe