MP Rahul Gandhi spoke about the Adani issue in Parliament

கடந்த 31 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் அடுத்த நாள்(பிப்ரவரி 1 ஆம் தேதி) 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் அதானி குழும விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மூன்று நாட்களாக முடங்கியது.

Advertisment

இதனைத் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றுகாலை 11 மணியளவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் மக்களவை கேள்வி நேரத்துடன் தொடங்கிய போது மீண்டும் எதிர்க்கட்சிகள் அதானி குழும விவகாரத்தை எழுப்பிய நிலையில் சபாநாயகர் அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

Advertisment

அதன் பிறகு மீண்டும் கூடிய மக்களவையில் பேசிய ராகுல் காந்தி எம்.பி, “ஒற்றுமை பயணத்தின் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கருத்துகளையும் காது கொடுத்து கேட்டோம். பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் குறைகளை கூறினார்கள். விலையேற்றம், விவசாய பாதிப்பு நாட்டின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பழங்குடியின மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அக்னிவீர் திட்டத்தால் இளைஞர்கள் பயம் கொள்கின்றனர். இந்திய ராணுவத்தால் அக்னிவீர் திட்டம் கொண்டுவரப்பட்டதாக நான் நினைக்கவில்லை. குடியரசு தலைவர் உரையில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்ற வார்த்தையே இல்லை.

நாடு முழுவதும் அதானி விவகாரம் குறித்தே பேசப்படுகிறது. அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 2014 ஆம் ஆண்டு 8 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2022ல் 140 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்பதை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு? அதானியின் சொத்து மதிப்பு ஒரு சில ஆண்டுகளில் உயர்ந்தது எப்படி? அனைத்து வகை தொழில்களிலும் அதானி அதானி என அதானி குழுமத்தின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது” என்றார். இதற்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.