MP Awadhesh Prasad cries over young woman incident in Ayodhya

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கடந்த 30 ஆம் தேதி இரவு 21 வயது இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரது குடும்பத்தினர் எங்குத் தேடியும் இளம்பெண் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி காலை அவரது கிராமத்தில் உள்ள ஒரு கால்வாயில் காணாமல் போன பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த பெண்ணின் உடல் நிர்வாணமாக இரு கண்கள் நோண்டி எடுக்கப்பட்டு உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் எலும்புகளில் முறிவு ஏற்பட்டுக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இதுகுறித்து முழு விவரமும் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த இளம்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது உத்தரப்பிரதேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினர் பெண்ணின் படுகொலைக்கு கடும் கண்டங்களைத் தெரிவித்து வருவதோடு உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அயோத்தியில் இளம்பெண் மனிதாபிமானமற்ற நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது நெஞ்சை உலுக்குவதாகவும், இது வெட்கப்படவேண்டிய விஷயம் என்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கதறி அழுத ஃபைசாபாத் எம்.பி. அவதேஷ் பிரசாத், பெண்ணின் படுகொலைக்கு நீதி கிடைக்காவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அதே சமயம் இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பாஜகவினர் கூறுகின்றனர்.

Advertisment