
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மட்டக்குழியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருடைய மனைவி சந்தியா (36). இவர்களுக்கு 4 வயதில் கல்யாணி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் சந்தியா, நேற்று மாலை கல்யாணியை தனது கணவரின் குடும்பம் வசிக்கும் புத்தன்குரூஸ் - மட்டக்குழி பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடியில் இருந்து தனது சொந்த வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது குழந்தை காணாமல் போனதாக தனது குடும்பத்தினரிடம் சந்தியா தெரிவித்துள்ளார். சந்தியா மாற்றி மாற்றி பேசியதை அடுத்து சந்தேகமடைந்த குடும்பத்தினர், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த போலீசார், சந்தியாவிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தனது குழந்தையை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தனது வீட்டிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள மூழிகுளம் பாலத்திலிருந்து குழந்தையை ஆற்றில் வீசிக் கொன்றதாக சந்தியா தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ஆற்றில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். விரிவான தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, இன்று காலை குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். இதனையடுத்து, கலமசேரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சந்தியாவை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் என்ன? இந்த கொலையில் வேறு யாராவது ஈடுபட்டார்களா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.