உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி பகுதியைச் சேர்ந்தவர் முர்ஷித்(29). இவருக்கு தேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தை இருந்துள்ளது. தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்த முர்ஷித், தனது மனைவி தேவியை கண்டித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக தேவி தனது கணவர் முர்ஷித்திடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முர்ஷித், தனது குழந்தையை நினைத்து கதறி அழுதுள்ளார். அதன் பிறகு, இறந்த குழந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டது. குழந்தை இறந்த ஐந்து நாட்களுக்கு பிறகு, வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை முர்ஜித் ஆய்வு செய்துள்ளார்.
அதில், தனது இரண்டு வயது குழந்தையை தேவி மாடியில் இருந்து வீசி படுகொலை செய்தது தெரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முர்ஜித், இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், வீட்டிற்கு வரும் நபர் குறித்து முர்ஜித்திடம் 2 வயது குழந்தை பலமுறை தெரிவித்துள்ளது. இதனால், அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தனது திருமணத்தை மீறிய உறவுக்கு குழந்தை இடையூறாக இருப்பதால் அந்த குழந்தையை பெற்ற தாயே மாடியில் இருந்து வீசி கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இதனையடுத்து, முறையான அனுமதி பெற்று அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தாயே பெற்ற குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.