ஏடிஎம் என்றாலே பணம் என்ற நிலையில் முதன் முதலாக தங்கம் வழங்கும் ஏடிஎம் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் முதல் தங்கம் வழங்கும் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. கோல்டுசிக்கா என்ற ஒரு தனியார் நிறுவனம் இதற்கான தொழில் உதவிகளை வழங்கியுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தில் டெபிட் கார்டுகள் மற்றும் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான அளவிலான தங்க நாணயத்தை எடுக்கலாம். அதில் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை என எட்டு வகையான எடைகளை கொண்ட தங்க நாணயங்கள் மொத்தம் ஐந்து கிலோ அளவிற்கு ஏடிஎம்மில் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான அளவில் தங்க நாணயங்களை எடுத்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.
இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.