Skip to main content

ஒடிசாவின் முதல்வராக மோகன் மஜி தேர்வு!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Mohan Majhi elected Chief Minister of Odisha

மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கோட்டையாக இருந்த ஒடிசா மாநிலத்தில், 1990 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியே நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்த பிஜு பட்நாயக், அம்மாநிலத்தில் முதல்வராக பணியாற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து பிஜு பட்நாயக், ஜனதா தளம் கட்சியில் இணைந்து, 1995 ஆம் ஆண்டில் முதல்வராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். பிஜு பட்நாயக் மறைவுக்குப் பிறகு, அவருடைய மகன் நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பின்பு கடந்த 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் அமோக வெற்றி பெற்று அம்மாநில முதல்வரானார். இந்த நிலையில் தான் 147 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 51 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்துள்ளது. பா.ஜ.க 78 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களிலும், சுயேட்சை 1 இடங்களிலும் வென்றது.

இந்நிலையில் பாஜக சார்பாக ஒடிசாவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் புவனேஸ்வரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களும், பாஜக மேலிட பார்வையாளர்களுமான ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்தர் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் ஒடிசாவில் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக மோகன் சரண் மஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ளார். மேலும் கனக வர்தன் சிங் தவே மற்றும் பைரவாடி போரிடா துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளனர். இதற்கான அறிவிப்பை ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மோகன் மஜி கியோஞ்சர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர் ஆவார். 

சார்ந்த செய்திகள்