Skip to main content

கேரள பாஜக தலைவர்களை எச்சரித்த மோடி! 

 

Modi warns Kerala BJP leaders
                                                       சுரேந்திரன்
​​​​​

கேரளாவிலும் சட்டசபைத் தோ்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில், அங்கு உள்ளாட்சித் தோ்தலில் கடும் தோல்வியைச் சந்தித்த பாஜக, ஆளும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரசுக்கு எதிராக வியூகம் அமைத்து வருகிறது. தோ்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக மக்களின் சாதாரண பிரச்சினையைக் கூட பெரிதாக்கும் விதத்தில் மாவட்டம் தோறும் போராட்டங்கள் மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான ஆா்ப்பாட்டங்களை நடத்திவருகிறது பாஜக.

 

ஆனால், போராட்டங்களை விட பாஜகவின் கோஷ்டி பூசல் உயா்ந்து நிற்பதால் தொண்டா்களும் டெல்லி தலைமையும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கேரள பாஜக மாநிலத் தலைவா் சுரேந்திரன், துணைத்தலைவா் ஷோபா, மத்திய மந்திரி முரளிதரன், முன்னாள் தலைவா்கள் கிருஷ்ணதாஸ், கும்மனம் ராஜசேகரன், எம்.டி.ரமேஷ் மற்றும் மாநிலச் செயலாளா் சுரேஷ் எனப் பல கோஷ்டிகள் உள்ளன. இவா்களோடு, மிசோரம் மாநில கவா்னரும் கேரள பாஜக முன்னாள் தலைவருமான ஸ்ரீதரன் பிள்ளையின் தரப்பினரும் ஓரு அணியாக உள்ளனா். இதில் சுரேந்திரன் தலைவரான ஆரம்பத்தில் இருந்தே நேரடியாகக் கோஷ்டியைக் களத்தில் காட்டுபவா் ஷோபா தான்.

 

அது கட்சி அலுவலகமாக இருந்தாலும், பொது இடமாக இருந்தாலும் நேரடியாகவே ஒருவருக்கொருவா் வாய்ப் பேச்சில் மோதிக் கொள்வார்கள். போராட்டம், ஆா்ப்பாட்டத்தில் கூட இரு அணியும் தனித் தனியாகவே நிற்பார்கள். மத்திய மந்திரியான முரளிதரன் கோஷ்டி, சில நேரங்களில் மாநிலத் தலைவா் சுரேந்திரன் கோஷ்டியுடன் ஒத்துப்போகும். அதே போல் மிசோரம் கவா்னா் ஸ்ரீதரன் பிள்ளையின் தரப்பின் ஆதரவு சில நேரங்களில் ஷோபாவுக்கும் உண்டு. அதேபோல் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் முக்கிய நிர்வாகி முகுந்தனின் ஆதரவும் ஷோபாவுக்கு உள்ளது. இதனால், ஷோபா சின்ன பிரச்சினையாக இருந்தாலும் உடனே டெல்லி தலைமைக்குக் கொண்டு போய்விடுவார். இது மாநிலத் தலைவா் சுரேந்திரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

Modi warns Kerala BJP leaders
                                                              ஷோபா


உள்ளாட்சித் தோ்தலின் தோல்விக்குக் காரணம் பாஜக தலைவா் சுரேந்திரனின் தவறான நடவடிக்கைகளும், முடிவுகளும் தான் என்றும் சொந்த மாவட்டத்தில் கூட ஒரு நகராட்சியைக் கூட பிடிக்க முடியவில்லை என்றும் முதலில் வாய்த் திறந்து குற்றம் சாட்டிய ஷோபாவின் பேச்சு, சுரேந்திரனுக்கு எரிச்சலை உருவாக்கியது. இந்த நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தகுதியானவா்களுக்கு வேலை கொடுக்காமல் பின்வாசல் வழியாக தகுதியற்றவா்களுக்கு வேலை கொடுப்பதாகக் கூறி இளைஞா்களும் காங்கிரசாரும் தலைமைச் செயலகம் முன் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். இதில், ஷோபாவும் அந்த இளைஞா்களுக்கு ஆதரவாக தொடா் உண்ணாவிரதம் நடத்தினா். அதற்கு பாஜக தலைமையும் பாஜக’வின் இளைஞா் அமைப்பும் ஆதரவு கொடுக்கவில்லை.

 

இது ஷோபாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லி சென்ற ஷோபாவும், சுரேந்திரனும் மாறி மாறி புகார்களை மோடி, அமித்ஷா, நட்டாவிடம் அள்ளி வீசினார்கள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கொச்சிவந்த மோடி, கோஷ்டியினா் எல்லாரையும் நேரில் அழைத்து எச்சரித்ததோடு வருத்தமும் தெரிவித்தார். இந்த நிலையில், கேரளாவில் ஓரே ஓரு எம்எல்ஏவோடு இருக்கும் பாஜக இத்தனை கோஷ்டிகளை சமாளித்து எப்படித் தோ்தல் இலக்கை அடையப் போகிறதோ? இந்நிலையில் 'மெட்ரோ மேன்' எனக் கூறப்படும் ஸ்ரீதரன், “நான் பாஜகவில் சேரப் போகிறேன். கேரளாவில் முதல்வா் ஆவது தான் எனது கனவு” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே இருக்கிற கோஷ்டி போதாது என்று அடுத்து இன்னொரு கோஷ்டியா? எனத் தலையில் அடித்துக் கொல்கிறார்கள் பாஜகவினா்.