"இந்த காயத்தை இந்தியா ஒருநாளும் மறக்காது" - பிரதமர் மோடி பேச்சு...

modi speech on 26 11 memorial day

பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மும்பை தாக்குதல் கொடுத்த காயத்தை இந்தியா என்றும் மறக்காது என பிரதமர் பேசியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டு 104 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து காபி ஷாப்பிலும், டாக்சியிலும் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இவற்றைத் தொடர்ந்து தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் நடந்த தாக்குதல்களில் மொத்தம் 61 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த இரண்டு நாட்களுக்குப் பின் நவம்பர் 29ம் தேதி காலை ஹோட்டல்களை சுற்றிவளைத்த 'தேசியப் பாதுகாப்புப் படை' உள்ளிருந்த தீவிரவாதிகள் 9 பேரைச் சுட்டுக் கொன்றது. இதில் பிடிபட்ட கசாப் 2012 நவம்பர் 21 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டான். இந்நிலையில், மும்பை தாக்குதலின் 12-வது நினைவு தினம் இன்று நாடுமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி காவல் அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி வாயிலாகப் பேசிய பிரதமர் மோடி, "கடந்த 2008-ல் இதே நாளில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். வெளிநாட்டவர், நம் நாட்டு மக்கள், அதிகாரிகள், காவலர்கள் எனப் பலரும் உயிர் துறந்தனர். மும்பை தாக்குதல் ஏற்படுத்திய காயத்தை இந்தியா ஒருநாளும் மறக்காது. அந்தத் தாக்குதலின் விளைவு, இந்தியா இன்று புதிய கொள்கைகளை வகுத்து பயங்கரவாதத்தைத் திறம்பட எதிர்கொள்கிறது. இன்றளவும் நாட்டில் மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற சம்பவம் நடக்காமல் பாதுகாத்து வரும் வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்" என்றார்.

modi Mumbai attack
இதையும் படியுங்கள்
Subscribe