Skip to main content

குஜராத்தில் தப்பு மேல் தப்பு செய்யும் பாஜக!

Published on 21/04/2019 | Edited on 21/04/2019

 

 

பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தில் பாஜக கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் மோடியை அழவைத்த காங்கிரஸ் கட்சி இந்தமுறை அவரை கதறவைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

 

m

 

கடந்தமுறை பட்டேல் இன மக்களின் தலைவனாக குஜராத்தை கலக்கி, காங்கிரஸுக்கு ஆதரவு அளித்த ஹர்திக் படேலைப் பார்த்து பாஜக தலைவர்கள் பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. கடந்த தேர்தலின்போது வேட்பாளராக தேவையான வயதை ஹர்திக் படேல் எட்டியிருக்கவில்லை. ஆனால், ஹர்திக் படேலின் வளர்ச்சியையும் அந்த வளர்ச்சி காங்கிரஸுக்கு உதவுவதையும் தடுக்க, அவர் மீது தேசத்துரோக வழக்குகளை போட்டது பாஜக அரசு.

 

அந்த வழக்குகளில் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கிறார் ஹர்திக் படேல். இந்நிலையில்தான் தனக்கு 25 வயது நிறைவடைந்ததால் இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஹர்திக் விரும்பினார். ஆனால், நீதிமன்ற உத்தரவுகள் மூலம் பாஜக அவரை போட்டியிட முடியாதபடி தடுத்துவிட்டது.

 

h

இதையடுத்து காங்கிரஸில் இணைந்த ஹர்திக் நேரடியாகவே காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரச்சாரத்துக்கு வரும் மக்கள் கூட்டம் பாஜகவை மிரட்டியது. எனவே, ஹர்திக்கை மிரட்ட வேறு வகையில் முயற்சியில் இறங்குகிறது. ஹர்திக் பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவரை பாஜக ஆதரவாளர் ஒருவர் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த அளவுக்கு ஹர்திக் படேலின் பாதுகாப்பு லட்சணம் இருக்கிறது.

 

இதனிடையே நேற்று அகமதாபாத் பொதுக்கூட்டத்தில் ஹர்திக் பேசும்போது, பாஜக ஆட்கள் புகுந்து கூட்டத்திற்கு வந்தவர்களை தாக்கத் தொடங்கினார்கள். இதையடுத்து, பேசிய ஹர்திக் படேல் தன்னை கொலை செய்ய பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

 

3 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து படேலுக்கு சிலை வைத்தால் படேல் பிரிவு மக்களை வளைத்துவிடலாம் என்று நினைத்த பாஜகவின் எண்ணம் ஈடேறாததால் ஹர்திக்கின் செல்வாக்கை சிதைக்க தவறான வழிகளை பாஜக கையாளத் தொடங்குகிறது. ஹர்திக்கிற்கு எதிராக பாஜக எடுக்கும் எந்த நடவடிக்கையும் அவருக்கும் காங்கிரஸுக்குமே லாபமாக மாறிக் கொண்டிருக்கிறது.

 

கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் குஜராத்தின் மொத்தமுள்ள 182 இடங்களில் 99 இடங்களை மட்டுமே பாஜக பெற்றது. அதற்கு முந்தைய தேர்தலில் 115 இடங்களை பெற்றிருந்த பாஜக 16 இடங்களை இந்தத் தேர்தலில் இழந்தது. பெரும்பான்மைக்கு அதிகமாக 9 இடங்கள் மட்டுமே பாஜகவுக்கு இருக்கிறது. மாறாக, கடந்த தேர்தலில் 61 இடங்களை பெற்றிருந்த காங்கிரஸ், 2017 தேர்தலில் 20 இடங்கள் கூடுதலாகப் பெற்று 81 இடங்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது.

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்த ராகுலும் ஹர்திக் படேலும், விக்னேஷ் மேவானியும் மோடியை அழ விட்டார்கள். மண்ணின் மைந்தன் என்று மார்தட்டிய மோடி 20க்கு மேற்பட்ட பிரச்சாரக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்படியும் திக்குமுக்காடித்தான் பெரும்பான்மை பெற்றது.

 

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில் பாஜகவுக்கு பாதி இடங்கள் கிடைப்பதே பெரும்பாடு என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். குஜராத்தில் 2014 தேர்தலில் 26 இடங்களையும் கைப்பற்றியது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்