/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgdfg_7.jpg)
இந்தியப் பிரதமர் மோடி, வெளிநாட்டுப் பயணங்களுக்காக எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருபவர். கடைசியாக 2019 நவம்பர் மாதம் வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்திருந்த பிரதமர் மோடி, அதன்பிறகு சுற்றுப்பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை. கடந்த வருடம் கரோனா பரவலால் பிரதமர் மட்டுமின்றி, மத்திய அமைச்சர்களும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், 15 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக நேற்று (26.03.2021) வெளிநாட்டுப் பயணமாக வங்கதேசம் சென்றடைந்தார் பிரதமர் மோடி. இந்த இரண்டு நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
அந்தவகையில், இன்று சத்கிரா மாவட்டம் ஈஸ்வரிபூரில் உள்ள ஜெஷோரேஷ்வரி காளி கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்ட அவர், வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம் ஒன்றையும் கோவிலுக்குக் காணிக்கையாக வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஊடகத்திற்குப் பேட்டியளிக்கையில், "இன்று, மா காளிக்கு முன் பிரார்த்தனை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது.மனித இனத்தைக் கரோனா தொற்றிலிருந்து விடுவிக்கும்படி காளியிடம் பிரார்த்தனை செய்தேன்.
மா காளி மேளா இங்கு நடைபெறும்போது, ​​இந்தியா மற்றும் வங்கதேசத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். எனவே, இங்கு ஒரு சமூக மண்டபம் தேவைப்படுகிறது. அது பல்நோக்குடன் இருக்க வேண்டும். இதனால் காளி பூஜையின்போது மக்கள் இங்கு வரும்போது, ​​அது அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சமூக, மத மற்றும் கல்வி நிகழ்வுகளுக்குக் கூட இது பயனுள்ளதாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக, சூறாவளி போன்ற பேரழிவுகளின்போது, இது அனைவருக்கும் தங்குமிடமாகவும் இருக்க வேண்டும். இதற்கான கட்டுமான பணிகளை இந்திய அரசு செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)