
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் ரைசன் பகுதியில் வசித்து வந்தார் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை பார்த்து ஆசி பெற்றார். குஜராத் தேர்தலின்போது கூட ஹீராபென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வாக்களிக்க அழைத்து வரப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இன்று காலை குஜராத் வந்த மோடி தாயின் இறுதி ஊர்வலத்திலும், உடல் தகனத்திலும் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், தாயாரின் இறுதிச்சடங்கை முடித்து கொண்ட கையோடு மேற்குவங்கத்தில் நடைபெற்ற வந்தே பாரத் ரயில் சேவை துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஹவுரா-நியூஜல் பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைப்பதற்கான நிகழ்ச்சியில் வீடியோ காணொலி காட்சி வாயிலாக குஜராத்திலிருந்தே கலந்துகொண்டார். இதே நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டு உரையாற்றினார்.