கரோனா வைரஸ் பரவல் குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலான நாடுகளில் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் மூவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களிடையே கரோனா குறித்த அச்சம் எழுந்துள்ளது.
இந்த சூழலில் இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெளிவாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வருபவர்களை சோதனைக்கு உட்படுத்துவது முதல் உடனடி மருத்துவ சிகிச்சை அளிப்பது வரை பல பணிகளில் அமைச்சகங்களும், மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. யாரும் அச்சப்படத் தேவையில்லை. நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள சிறிய மற்றும் முக்கியமான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.