Skip to main content

"ஒட்டுமொத்த நாடும் உங்களுக்குத் துணைநிற்கும்" - பிரதமர் மோடி நம்பிக்கை...

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

modi about amphan cyclone

 

'அம்பன்' புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மேற்குவங்க மக்களுக்கு ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 


'அம்பன்' புயல் மேற்கு வங்கத்தின் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், நேற்று மாலை இந்தப் புயல் கரையைக் கடந்தது. நேற்று மாலை இப்புயல் கரையேறிய போது மேற்குவங்கத்தில் பெரும்பாலான பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடும் மழையும் பெய்தது. மணிக்குச் சராசரியாக 155 கி.மீ. முதல் 165 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று வீடுகள், மரங்கள், மின்கோபுரங்கள் உள்ளிட்டவற்றைத் தூக்கிவீசியது. மேற்குவங்க கடலோரத்தில் 5 மீட்டர் உயரத்திற்குக் கடல் அலைகள் எழுந்தன. புயல் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக மேற்குவங்க மாநிலத்தில் 5 லட்சம் பேரும், ஒடிசா மாநிலத்தில் 1.5 லட்சம் பேரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புயலில் 72 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மேற்குவங்க மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேசியுள்ள பிரதமர் மோடி, "மேற்குவங்கத்தில் 'அம்பன்' புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை நாம் பார்த்தோம். இது நமக்குச் சவாலான நேரம். ஒட்டுமொத்த நாடும் மேற்குவங்கத்திற்குத் துணை நிற்கும். புயல் பாதிப்பிலிருந்து மேற்குவங்க மக்கள் மீண்டு வரப் பிராத்திப்போம். நிலைமை சீரடைவதை உறுதிப்படுத்துவோம்’’ எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பன் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட 50 என்.டி.ஆர்.எப். வீரர்களுக்கு கரோனா பாதிப்பு...

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

50 ncrf members served during amphan tested positive for corona


'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட 50 தேசிய பேரிடர் மேலாண் படையினருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 
 


மேற்குவங்க மாநிலத்தில் கரையேறிய 'அம்பன்' புயல் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 20 ஆம் தேதி மேற்கு வங்கத்தின் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே இந்தப் புயல் கரையைக் கடந்த போது, பெரும்பாலான பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடும் மழை பெய்ததோடு, மணிக்குச் சராசரியாக 155 கி.மீ. முதல் 165 கி.மீ. வேகத்தில் பயங்கர காற்று வீசியது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், மரங்கள், மின்கோபுரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்நிலையில் 'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட 50 தேசிய பேரிடர் மேலாண் படையினருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை முடித்துக்கொண்டு, ஒடிசாவின் கட்டாக் நகருக்குத் திரும்பிய 178 வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.  இதில் 50 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

 


 

Next Story

"இதுபோன்ற ஒன்றை எனது வாழ்வில் பார்த்ததே இல்லை" - மம்தா பானர்ஜி கவலை...

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

mamata about amphan cyclone

 

எனது வாழ்வில் 'அம்பன்' போன்ற ஒரு புயலைப் பார்த்ததே இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

புதன்கிழமை மாலை மேற்குவங்கத்தில் கரையேறிய 'அம்பன்' சூப்பர் புயல், அம்மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது எனலாம். புதன்கிழமை மதியம் தொடங்கி சுமார் நான்கு மணிநேரம் கரையைக் கடந்த இந்தப் புயல், அம்மாநிலத்தின் பெரும்பகுதியை நாசமாக்கிச் சென்றுள்ளது. மேலும், இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 1,999 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா சந்தித்த முதல் சூப்பர் புயலான இது ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் லட்சக்கணக்கான மரங்களை அழித்துள்ளது. இப்புயலால் ஏற்பட்ட சேதத்தை இன்று நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, சீரமைப்பு பணிகளுக்காக உடனடியாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 


இந்நிலையில் இந்தப் புயல் குறித்துப் பேசியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இதுபோன்ற ஒரு புயலை என் வாழ்வில் இதுவரை நான் பார்த்தது இல்லை. ஒரு தேசியப் பேரிடரைவிட அதிகமான சேதம் என்றுதான் இதனைக் குறிப்பிட வேண்டும். இதிலிருந்து மீண்டு இயல்புநிலை திரும்பச் சிறிது காலம் ஆகும். ஏறக்குறைய 8 மாவட்டங்களைப் புயல் சீரழித்துவிட்டது. 60 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 கோடி மக்கள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசும், அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சனிக்கிழமை நான் நேரடியாகச் செல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.