
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வழங்கியது.
அதோடு சேர்த்து, ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கும் அறிவுரை வழங்கியது. அவ்வாறு குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றால் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை பெற்று தந்ததற்கு, திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இத்தகைய சூழலில் தான் தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 அரசியல் சாசன கேள்விகள் அடங்கிய குறிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த மே 15ஆம் தேதி அனுப்பி இருந்தார். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேள்வி எழுப்பியிருந்தார். அதில், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200இன் அடிப்படையில் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது அவர் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாக நிர்ணயிக்க முடியுமா? என்றும், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 201வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீதான முடிவுகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியுமா? என்று உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்திருந்தார்.
உச்சநீதிமன்றத்திற்கு கேள்விகள் எழுப்பி குறிப்புகள் அனுப்பிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். தமிழக ஆளுநர் வழக்கு மற்றும் பிற முன்னுதாரணங்களில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே தீர்க்கப்பட்ட அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்த்தெறிய முயற்சிக்கும் என்றும் சட்டத்தின் மகத்துவத்தையும், அரசியலமைப்பின் இறுதி விளக்கவுரையாளராக உள்ள உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கும் நேரடியாக சவால் விடுக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், குடியரசுத் தலைவர் அனுப்பிய குறிப்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள், அரசியலமைப்பின் அடிப்படை அதிகாரப் பகிர்வை சிதைத்து, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேற்கு வங்கம், கர்நாடகா, ஹிமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அந்த கடிதத்தில், ‘மத்திய அரசின் ஆலோசனையின் பேரில், குடியரசுத் தலைவர், கடந்த மே 13, அன்று இந்திய அரசியலமைப்பின் பிரிவு 143 இன் கீழ், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை அதிகார வரம்பைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தின் முன் 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்தக் குறிப்பு எந்த மாநிலத்தையோ அல்லது தீர்ப்பையோ குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தமிழ்நாடு அரசு தமிழக ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விளக்கம் குறித்த தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதே இதன் நோக்கம். வெளிப்படையாக, பாஜக இந்தத் தீர்ப்பை சீர்குலைக்க முயற்சிக்கிறது. இது ஒரு பிடிவாதமான ஆளுநரை எதிர்கொள்ளும்போது மற்ற மாநிலங்களால் ஒரு முன்னுதாரணமாகப் பயன்படுத்தப்படலாம்.
இந்த முக்கியமான கட்டத்தில், பாஜகவை எதிர்க்கும் மற்றும் நமது கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநில சுயாட்சியைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் பிராந்தியக் கட்சிகளின் தலைவர்களையும் வரவிருக்கும் சட்டப் போராட்டத்தில் ஒன்றுபடுமாறு நான் அழைப்பு விடுத்திருந்தேன். உச்ச நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் கோரிய இந்தக் குறிப்பை எதிர்க்குமாறு உங்களை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்வதற்காக நான் இப்போது உங்களுக்கு எழுதுகிறேன். நமது உச்ச நீதிமன்றம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் உறுதி செய்துள்ளபடி, நீதிமன்றத்தின் முன் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க ஒரு ஐக்கிய முன்னணியை முன்வைக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.