Skip to main content

மனைவி செய்த தவறு - வீடியோவை பார்த்த கணவன் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை

Published on 04/08/2018 | Edited on 04/08/2018
Suicide


மனைவி செய்த தவறை வீடியோவில் பார்த்த கணவன் கடும் அதிர்ச்சியடைந்ததுடன், தனது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுத்த மனைவியும் தீக்காயம் அடைந்து உயிரிழந்தார். 
 

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டம் கலசிங்கா கிராமத்தை சேர்ந்தவர் குல்விந்தர் சிங். 35 வயதான இவருக்கு திருமணமாகி மனைவியும், 8 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். குல்விந்தர் சிங், ஜோர்டனில் பணியாற்றி வருகிறார். அடிக்கடி வர முடியாது. வருடத்திற்கு இரண்டு முறை போல்தான் வருவார். குடும்பத்தின் மாத செலவிற்கு பணம் அனுப்பும் அவர், அவ்வப்போது தொலைபேசியில் மனைவி மற்றும் குழந்தைகளோடு பேசுவோர். 

 

 


குல்விந்தர் சிங் வெளிநாட்டில் இருப்பதால் அவரது மனைவிக்கு அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் சில உதவிகளை செய்து வந்துள்ளார். நாளடைவில் அவர்கள் நட்பாக பழகியுள்ளனர். நட்பு காதலாக மாறியது. பணம் கொடுக்கல், வாங்கலும் இருந்தள்ளது. இதனை தெரிந்துகொண்ட அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், அவர்கள் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்துள்ளனர். 
 

மேலும், அந்த வீடியோவை குல்விந்தர் சிங் மனைவியிடம் காட்டி, அடிக்கடி மிரட்டியுள்ளனர். இந்த வீடியோவை உனது கணவருக்கு அனுப்பி வைப்போம் என்றும், பணம் தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து மிரட்டியதால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த அப்பெண், இந்த விவகாரம் வெளியே தெரியக் கூடாது என்றும், அந்த கும்பலிடம் இருந்து அந்த வீடியோவை வாங்கி அழித்துவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், சம்மந்தப்பட்ட நபரிடம், தனது வீட்டுக்கு வரக்கூடாது என்றும், வெளியில் செல்லும்போது தன்னை சந்திக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
 

மூன்று மாதங்களுக்கு முன்பு அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் வீடியோவை வைத்து மிரட்டி வந்த நான்கு பேருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அந்த கும்பல் குல்விந்தர் சிங்குக்கு வீடியோவை அனுப்பி வைத்தனர். வீடியோவை பார்த்து கோபம் அடைந்த அவர் நாடு திரும்பி உள்ளார். 
 

 

 

வீட்டுக்கு வந்த இரண்டு நாட்கள் மனைவி மீது கோபமாக இருந்த குல்விந்தர் சிங், அவரிடம் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். இதனை புரிந்து கொண்ட அவரது மனைவி மன்னிப்பு கேட்டுள்ளார். தான் செய்தது தவறுதான், மன்னிக்க முடியாத குற்றம்தான், இனி அந்த தவறு நடக்காது, உங்கள் முகத்தில் முழிக்கவே தனக்கு தகுதியில்லை, நமது குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் என அப்பெண் கூறியுள்ளார்.

 

 


இருப்பினும் கோபம் அடங்காத குல்விந்தர் சிங் தனது குழந்தைகள் 8 வயதான சோனல், 5 வயதான அபி ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றியதுடன், தனது மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனை அவரது மனைவி தடுத்துள்ளார். அவர் எவ்வளவோ தடுத்தும், குல்விந்தர் சிங் மற்றும் குழந்தைகள் மூன்று பேரும் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். குல்விந்தர் சிங் மனைவி 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். குழந்தைகளையும் தீ வைத்துக் கொளுத்திய இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.