இந்தாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகி போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூரில் நடைபெற்றது. இதில் மணிகா விஸ்வகர்மா பட்டத்தை வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற ரியா சிங்கா மகுடம் சூட்டினார். இப்போட்டியில் முதல் ரன்னர்-அப்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தன்யா சர்மா, இரண்டாவது ரன்னர்-அப்பாக ஹரியானாவைச் சேர்ந்த மெஹக் திங்க்ரா மற்றும் மூன்றாவது ரன்னர்-அப்பாக அமிஷி கௌஷிக் ஆகியோர் இடம் பிடித்தனர். 

Advertisment

இறுதிச் சுற்றில் மணிகாவிடம், ‘பெண்களின் கல்விக்காக வாதிடுவதா அல்லது ஏழைக் குடும்பங்களுக்கு பொருளாதார உதவி வழங்குவதா... இதில் எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள் ஏன்? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மணிகா, பெண்களின் கல்வி தான் என்றார். அதற்கு காரணமாக “பெண்களுக்கு கல்வி கொடுப்பது, அவர்களின் வாழ்க்கையைத் தாண்டி நாட்டின் எதிர்காலத்தையே மாற்றக்கூடியவை. அதுதான் வறுமையை உடைப்பதற்கான கருவியும் கூட” என்றார். 

 மகுடம் சூட்டிய பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர், “என்னுடைய பயணம் எனது சொந்த ஊரான கங்கா நகரில் இருந்து ஆரம்பித்தது. நான் டெல்லிக்கு வந்து போட்டிக்கு தயாரானேன். நாம் நமக்குள் நம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டி என்பது வெறும் துறை ரீதியாக நடப்பது மட்டும் கிடையாது, அதைத் தாண்டி ஒரு நபரின் குணத்தை உருவாக்குவதும் தான்” என்றார். 

மணிகா விஸ்வகர்மா, ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்தவர். தற்போது டெல்லியில் வசித்து வரும் அவர், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதார பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்து வருகிறார். முன்னதாக 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் ராஜஸ்தான் பட்டம் வென்ற மணிகா, கிளாசிக்கல் நடனத்தில் பயிற்சி பெற்றவராகவும் ஓவியராகவும் உள்ளார். இவரை லலித் கலா அகாடமி மற்றும் ஜேஜே கலைப் பள்ளி நிர்வாகம் கௌரவித்தது. 

Advertisment

இவர் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றதன் மூலம் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளவுள்ளார். இதுவரை மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மூன்று முறை இந்தியர்கள் பட்டம் வென்றுள்ளார்கள். முதலாவதாக 1994ஆம் ஆண்டு சுஷ்மிதா சென், 2000ஆம் ஆண்டு லாரா தத்தா மற்றும் கடைசியாக 2021ஆம் ஆண்டு ஹர்னாஸ் சந்து வென்றிருக்கிறார்கள். இதையடுத்து நான்காவது முறையாக மணிகா விஸ்வகர்மா வெல்வாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.