Skip to main content

"மழைநீர் சேகரிப்பு" திட்டத்தை கட்டாயமாக்கும் மத்திய அரசு?

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

இந்தியாவில் நீர்வளத்தை பாதுகாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 'ஜல் சக்தித்துறை' அமைச்சகம் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகத்தின் செயல்பாடுகள் முழுவதும் நீர்வளத்தை சார்ந்தே இருக்கும். அதே போல் நீர்வளத்தை அதிகரிப்பது மற்றும் நீரை சேமிக்க தேவையான புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கையில் ஜல் சக்திச்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மாநிலங்கள் பட்டியலை இந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் 255 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது.

 

 

ministry of jal shakti rain water harvesting may be implement in all over india

 

 


அதனைத் தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்பை செயல்படுத்தும் வகையில் ஜல சக்தி திட்டத்தை ஜூலை 1 முதல் மத்திய அரசு தொடங்க உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு மத்திய துறைகளில், இணை அல்லது கூடுதல் செயலர் அந்தஸ்தில் இருக்கும் 255 ஐஏஎஸ் அதிகாரிகளை இணைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிரச்சாரத்தில் ஒட்டுமொத்தமாக, நிலத்தடி நீர் சரியும் நிலையில் உள்ள 313 பகுதிகளிலும், நிலத்தடி நீர் அதிக அளவு உறிஞ்சப்பட்ட 1,186 பகுதிகளிலும், நிலத்தடி நீர் மட்டம் மிகக் குறைந்து போன 94 பகுதிகளிலும் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பிரச்சாரம் தென்மேற்கு பருவமழையைப் பெறும் தென் மாநிலங்களில் ஜூலை 1 தொடங்கி, செப்டம்பர் 15 ஆம் தேதி வரை, ஜல் சக்தி திட்டத்தின் கீழ் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். வடகிழக்குப் பருவமழையின் போது அக்டோபர் 1 முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

 

 

ministry of jal shakti rain water harvesting may be implement in all over india

 

 


மழைநீர் சேகரிப்புத் திட்டம் மற்றும் நீர்வளப் பாதுகாப்புக்கான இந்த திட்டம் https://indiawater.gov.in/imisreports/IMISReportLogin.aspx  என்ற இணைய தளத்தின் மூலம், மொபைல் அப்ளிகேசன்களை பயன்படுத்தி நேரடியாகக் கண்காணிக்கப்படும் என ஜல் சக்தித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே ஜல் சக்தித்துறை அமைச்சகத்திற்கென்று புதியதாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய  தளத்தின் முகவரி: https://ddws.gov.in/# ஆகும். இதன் மூலம் மத்திய அரசு "மழைநீர் சேகரிப்பு " திட்டத்தை நாடு முழுவதும் கட்டாயமாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.