Skip to main content

தமிழகத்திற்கு ரூ. 183.67 கோடி ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு!

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

 

ministry of finance release the fund for state governments

 

தமிழகம் உட்பட 17 மாநிலங்களுக்கு, வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த மாநிலங்கள் பெறும் மானியத்தின் அளவை, நிதி ஆணையம் முடிவு செய்கிறது. ஒரு மாநிலத்தின் வருவாய் மதிப்பீடு மற்றும் செலவு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளி அடிப்படையில் இந்த  மானியம் பரிந்துரைக்கப்படுகிறது. 

 

இதில் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான பகிர்வு மதிப்பீட்டை நிதி ஆணையம் கணக்கில் எடுத்துக் கொண்டு, 17 மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூபாய் 1,18,452 கோடி வழங்க பரிந்துரை செய்தது. இந்த மானியம் 12 மாத தவணைகளாக மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. 

 

ministry of finance release the fund for state governments

 

அதன்படி, 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியத்தின் மூன்றாவது தவணையாக ரூபாய் 9,871 கோடியை விடுவித்துள்ளது மத்திய நிதியமைச்சகம். இதில் தமிழகத்துக்கு மூன்றாவது தவணையாக ரூபாய் 183.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களில் மொத்தமாக ரூபாய் 551.01 கோடி வழங்கப்பட்டுள்ளது.

 

இதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்திற்கு மூன்றாவது தவணையாக ரூபாய் 1,657.58 ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களில் மொத்தமாக ரூபாய் 4,972.74 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மேற்குவங்க மாநிலத்திற்கு மூன்றாவது தவணையாக ரூபாய் 1,467.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கேரளாவின் மோசமான நிதி  நிர்வாகமே காரணம்' - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு 

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Central government alleges in Supreme Court on Kerala's poor financial management is the reason

மாநிலங்கள் வாங்கக் கூடிய கடன் தொகைக்கு மத்திய அரசு உச்சவரம்பு விதித்துள்ளதாக கேரளா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, ‘கடன் வாங்கும் வரம்புகளை மத்திய அரசு குறைப்பது என்பது மாநிலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மேலும், நீண்ட கால பொருளாதாரத்தில் சேதத்தை ஏற்படுத்தும். இது குறுகிய காலத்திலோ அல்லது நடுத்தர காலத்திலோ கூட சரிசெய்ய முடியாததாக இருக்கும். கேரள மாநிலத்தில் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில அரசுக்கு உடனடியாக சுமார் ரூ.26,000 கோடி தேவைப்படுகிறது. இந்த நிலையில், மாநில அரசு கடன் திரட்ட மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. 

அரசியலமைப்பு சட்டம், மாநிலங்களுக்கு நிதி சுயாட்சியை வழங்கியிருக்கிறது. சுதந்திரம் அடைந்த பின்னர், இத்தனை ஆண்டுகளாக மாநிலங்கள் தங்கள் பட்ஜெட்டை தயாரித்து நிர்வகிப்பதற்கு இந்த அதிகாரங்களைத் தான் பயன்படுத்தி வருகின்றன. பட்ஜெட்டை சமநிலைப்படுத்துவதற்கும், நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கும், மாநிலத்தின் கடனை தீர்மானிப்பதற்கும் மாநிலங்களுக்கு உட்பட்டது. மேலும், தேவையான அளவிற்கு மாநிலம் கடன் வாங்காவிட்டால், குறிப்பிட்ட நிதியாண்டிற்கான மாநிலத் திட்டங்களை மாநிலத்தால் முடிக்க முடியாது.

Central government alleges in Supreme Court on Kerala's poor financial management is the reason

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சகம், கேரளா மீது நிகரக் கடன் வாங்கும் உச்சவரம்பை விதித்துள்ளது. இதன் மூலம், பொது சந்தையில் கடன் திரட்டுவது உள்பட அனைத்து வழிகளில் இருந்தும் கடன் திரட்டுவதை கட்டுப்படுத்துகிறது. மேலும், இது அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், தனது நிதி விவகாரங்களை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு இருக்கின்ற அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வகையில் உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது' என்று தெரிவிக்கப்பட்டது.  

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி.விசுவநாதன் அமர்வு முன் வந்தது. அப்போது, இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் (05-02-24) அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'கேரளா மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு அந்த அரசின் மோசமான நிதி நிர்வாகமே காரணம். இந்த நிலையில் தான், கேரளா அரசு சார்பில் கடன் வாங்கும் வரம்புகளை அதிகரிக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்திருக்கிறது. கேரளா அரசு, மாநில அரசின் உற்பத்தி திட்டங்கள், நலத்திட்டங்களுக்காக கடன் வாங்கவில்லை. மணிலா அரசு ஊழியர்களின் ஊதியம், பென்ஷன், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கு கடன் வாங்க முயற்சிக்கிறது.

இதனையடுத்து, கடன் வாங்கும் வரம்பு மற்றும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறைத்த மத்திய அரசுக்கு எதிராக கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், மத்திய அரசு, கேரளா ஆளுநர் கண்டித்து நாளை (08-02-24) டெல்லியில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடத்தப்படவுள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயனின் இந்த போராட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கழிவு நீர் அகற்றும்போது ஏற்படும் உயிரிழப்பு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Loss of life during waste water disposal Supreme Court action order

 

கழிவு நீர் அகற்றும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கழிவு நீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி கழிவு நீர் அகற்றும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் உயர்த்தப்பட்ட இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

 

அதே சமயம் கழிவு நீர் அகற்றும்போது படுகாயமடைந்து நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்டால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதர பாதிப்புக்கு ரூ.10 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாக்கடை மற்றும் மனிதக் கழிவுகளை கையால் சுத்தம் செய்வதை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு 14 வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது.