/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4131.jpg)
கேரளா மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் சிவன்குட்டி. இவர், நேற்று திருவனந்தபுரம் நோக்கி தனது அரசு வாகனத்தில் பயணித்தார். திருவனந்தபுரத்திற்குச் செல்லும் வழியில் முக்கிய சந்திப்பாக புலம் சந்திப்பு இருக்கிறது. அங்கு போக்குவரத்து சிக்னல் வேலை செய்யாததால், காவல்துறையினர் போக்குவரத்தை முறைப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இந்தச் சமயத்தில், கொட்டக்கரா எனும் மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு ஆம்புலன்ஸ் நோயாளியுடன் அதே புலம் சந்திப்பைக் கடக்க முயன்றது. அப்போது அமைச்சரின் பாதுகாப்பு வாகனமான கான்வாய் அந்தச் சந்திப்பில் வேகமாகத்திரும்புவதற்கு வந்தபோது, ஆம்புலன்ஸ்மீது அமைச்சரின் கான்வாய் வாகனம் மோதி, ஆம்புலன்ஸ் நடு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும், அமைச்சரின் கான்வாய் அங்கு நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்திலும் மோதியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1540.jpg)
உடனடியாக அந்தப் பகுதியில் இருந்த மக்களும், காவல்துறையினரும் இணைந்து கவிழ்ந்த ஆம்புலன்ஸை மீட்டனர். அந்த ஆம்புலன்ஸில் நோயாளி உட்பட மூவர் இருந்தனர். அவர்கள் மூவருக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சரின் கான்வாய் வாகனம் ஆம்புலன்ஸ் மீது மோதிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் இணையவாசிகள், அமைச்சரின் வாகனம் தவறான பாதை அதாவது எதிர்த்திசை பாதையில் வேகமாக வந்திருக்கிறது என விமர்சனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
Follow Us