கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் செயல்படாமல் முடங்கியுள்ளன. இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டன. ஆனால், கேரளா மாநிலத்தில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் கடந்த 29ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் கேரளப் பொதுத் தேர்வு முடிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவி கோபிகாவை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கடந்த ஆண்டு நிலச்சரிவில் தாய், தந்தை உள்பட 24 உறவினர்களை இழந்தார் கேரள மாணவி கோபிகா. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் A+ மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இழப்பின் பெருவலியைப் பொறுத்துக்கொண்டு உழைத்திருக்கிறார். இந்த மனவலிமை போற்றுதலுக்குரியது'' என்று பதிவிட்டுள்ளார்.